சேலத்தில் குழந்தை உள்பட 4 பேருக்கு கொரோனா பரிசோதனை
சேலத்தில் குழந்தை உள்பட 4 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. முன்னதாக இவர்கள் கள்ளக்குறிச்சியில் இருந்து மங்களூருவுக்கு நடைபயணம் சென்றனர்.
சேலம்,
கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே சக்திநகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 55). இவரது மகள் அஞ்சலி (24), மகன் மணிகண்டன் (19). இவர்கள் 3 பேரும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கள்ளக்குறிச்சியில் உறவினர் ஒருவர் இறந்துவிட்டதால் அதில் பங்கேற்பதற்காக மங்களூருவில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு சென்றனர். அப்போது அஞ்சலி தனது 8 மாத கை குழந்தையையும் தூக்கிச் சென்றார். பின்னர் அவர்கள் அனைவரும் சில நாட்கள் கள்ளக்குறிச்சியில் உறவினர் வீட்டில் தங்கிவிட்டு சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டனர். ஆனால் ஊரடங்கு உத்தரவு வருகிற 17-ந் தேதி வரை மேலும் நீட்டிக்கப்பட்டு உள்ளதால் எப்படி செல்வது என்று தெரியாமல் திகைத்தனர்.
பின்னர் அவர்கள் கள்ளக்குறிச்சியில் இருந்து நடந்தே மங்களூருவுக்கு புறப்பட்டனர். 2 நாட்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சியில் புறப்பட்ட அவர்கள், நேற்று மதியம் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே நடைபயணமாக சென்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை அழைத்து விசாரித்தனர். அதற்கு லட்சுமி மற்றும் அவரது மகன் மற்றும் மகள் ஆகியோர் தாங்கள் கள்ளக்குறிச்சியில் இருந்து மங்களூருவுக்கு செல்வதாக கூறினர். இருந்தபோதிலும் வெளி மாவட்டத்தில் இருந்து சேலத்துக்கு வந்துள்ளதால் பச்சிளம் குழந்தை உள்பட 4 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய போலீசார் முடிவுசெய்து அவர்களை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா? என டாக்டர்கள் பரிசோதனை செய்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story