சாத்தான்குளம் அருகே ஆட்டோ டிரைவர் கொலை: மர்மநபர்களை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைப்பு
சாத்தான்குளம் அருகே ஆட்டோ டிரைவரை வெட்டிக் கொலை செய்த மர்மநபர்களை பிடிப்பதற்காக, போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
சாத்தான்குளம்,
சாத்தான்குளம் அருகே தெற்கு பேய்க்குளத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் ஜெயக்குமார் (வயது 38). ஆட்டோ டிரைவரான இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். மேலும் ஸ்ரீவெங்கடேசுவரபுரம் பஞ்சாயத்து 6-வது வார்டு கவுன்சிலராகவும் இருந்தார். இவர் நேற்று முன்தினம் இரவில் தனது பெட்டிக்கடையின் அருகில் நின்றபோது, அங்கு 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 8 மர்மநபர்கள் திடீரென்று ஜெயக்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். கொலையாளிகளை பிடிப்பதற்காக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களிலும் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக 10-க்கு மேற்பட்டவர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே ஜெயக்குமார் கொலை வழக்கு தொடர்பாக, பேய்க்குளம் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் சிலரை போலீசார் பிடித்து சென்று விசாரித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பேய்க்குளத்தில் வியாபாரிகள் நேற்று காலையில் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் வியாபாரிகள் சங்க நிர்வாகிகளை போலீசார் விடுவித்தனர். இதையடுத்து பேய்க்குளத்தில் வியாபாரிகள் மீண்டும் கடைகளை திறந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story