சாத்தான்குளம் அருகே ஆட்டோ டிரைவர் கொலையில் 10 பேர் கைது
சாத்தான்குளம் அருகே ஆட்டோ டிரைவர் கொலையில் 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
சாத்தான்குளம்,
சாத்தான்குளம் அருகே தெற்கு பேய்க்குளத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவருடைய மகன் ஜெயக்குமார் (வயது 38). ஆட்டோ டிரைவரான இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். மேலும் இவர் ஸ்ரீவெங்கடேசுவரபுரம் பஞ்சாயத்து 6-வது வார்டு கவுன்சிலராகவும் இருந்தார்.
இவர் கடந்த 18-ந்தேதி இரவில் தனது பெட்டிக்கடையின் அருகில் நின்றபோது, அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த 8 மர்மநபர்கள் திடீரென்று ஜெயக்குமாரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர். இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சாத்தான்குளம் அருகே பேய்க்குளத்தை அடுத்த பனைகுளத்தைச் சேர்ந்த தேவதிரவியம் மகன் ராஜ மிக்கேலுக்கும், ஜெயக்குமாருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. ராஜ மிக்கேல் மீது கொலை, கொலைமுயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளதால், அவரது பெயர் ரவுடி பட்டியலில் உள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு ஜெயக்குமாரின் ஆட்டோவை சேதப்படுத்தியது தொடர்பாக ராஜ மிக்கேல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேய்க்குளத்தில் ஆடு மேய்க்கும் தொழிலாளியை தாக்கியது தொடர்பாக சிலர் சாலைமறியலில் ஈடுபட்டனர். மேலும் ஒரு பிரிவினர் தாக்கப்பட்டது தொடர்பாக சிலர் பஞ்சாயத்து அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். இதற்கு ஜெயக்குமார்தான் தூண்டுதலாக இருந்ததாக ராஜ மிக்கேல் தரப்பினர் கருதினர்.
பின்னர் ஜெயக்குமார் கவுன்சிலரான பிறகு இதுதொடர்பாக அரசு அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் செய்து வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜமிக்கேல் உள்ளிட்டவர்கள் ஜெயக்குமாரை கொலை செய்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக ராஜ மிக்கேலின் கூட்டாளிகளான மீரான்குளத்தைச் சேர்ந்த சிலுவைமுத்து மகன் அழகு ஜார்ஜ் (35), லாசர் மகன் முத்துகிருஷ்ணன் (37), கோபாலகிருஷ்ணன் மகன் சங்கரவேல் (27), பெருமாள்குளத்தைச் சேர்ந்த சிவகுமார் மகன் நவீன் (21), பேய்க்குளம் கணபதி நகரைச் சேர்ந்த அசோக்குமார் மகன் தசரதன் (22), பேய்க்குளம் சங்கரநாராயண கோவில் தெருவைச் சேர்ந்த பரமசிவன் மகன் மகராஜன் (21), தெற்கு பேய்க்குளத்தைச் சேர்ந்த சுப்பையா மகன் கணேசன் (28), பழைய காயலைச் சேர்ந்த டேனியல் மகன் மத்தியாஸ் (35), மேல பனைகுளத்தைச் சேர்ந்த சூசை மகன் ராஜாசிங் (36) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் அனைவரையும் நேற்று சாத்தான்குளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவான ராஜ மிக்கேல் உள்ளிட்ட சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story