நர்சுக்கு கொரோனா தொற்று: மூலச்சல் பகுதியில் 15 வீடுகளை தனிமைப்படுத்திய அதிகாரிகள்


நர்சுக்கு கொரோனா தொற்று: மூலச்சல் பகுதியில் 15 வீடுகளை தனிமைப்படுத்திய அதிகாரிகள்
x
தினத்தந்தி 16 Jun 2020 3:00 AM IST (Updated: 15 Jun 2020 11:15 PM IST)
t-max-icont-min-icon

நர்சுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையொட்டி மூலச்சல் பகுதியில் 15 வீடுகளை தனிமைப்படுத்தி அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பத்மநாபபுரம்,

தக்கலை அருகே மூலச்சல் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய பெண் பத்துகாணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இவர் களியக்காவிளை சோதனை சாவடியில் அமைக்கப்பட்டுள்ள பரிசோதனை முகாமில் சுகாதார பணியாளராக வேலை பார்த்த போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

சுகாதார துறை அதிகாரிகள் மூலச்சல் பகுதிக்கு சென்று நர்சின் கணவர், மாமனார், மாமியார் ஆகியோரை பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். நர்சின் வீடு அமைந்திருக்கும் பகுதியை அதிகாரிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து 15 வீடுகளை தனிமைப்படுத்தினர்.

தடுப்புகள்

நர்சின் வீடு மணலி-மேக்காமண்டபம் சாலையோரம் அமைந்துள்ளது. அந்த சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். எனவே, சாலையை முற்றிலுமாக தடை செய்ய முடியாததால் நர்சின் வீட்டை சுற்றி 15 வீடுகளை உள்ளடக்கி சாலையோரம் கம்பு, தகர ஷீட் போன்றவற்றால் தடுப்புகள் அமைத்து அடைத்தனர். அந்த பகுதியை சேர்ந்த யாரும் வெளியே செல்லக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார பணியாளர்கள் முகாமிட்டு தடை செய்யப்பட்ட பகுதியில் கிருமி நாசினி தெளித்து, பிளச்சிங் பவுடர் தூவும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த பணிகளை கல்குளம் தாசில்தார் ஜெகதா, முளகுமூடு பேரூராட்சி செயல்அலுவலர் (பொறுப்பு) மகேஸ்வரன் ஆகியோர் பார்வையிட்டனர். தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் ஏற்பாட்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மும்பையில் இருந்து வந்தவர்

பத்மநாபபுரம், விவேகானந்தர் தெருவை சேர்ந்த 27 வயதுடைய வாலிபர் மும்பையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்கவுள்ளது. அந்த வாலிபர் கடந்த 12-ந் தேதி விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார். அங்கிருந்து குமரி எல்லையான களியக்காவிளை வந்த போது சுகாதார பணியாளர்களால் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, குமாரகோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டார். நேற்று முன்தினம் பரிசோதனை முடிவு வெளியான போது, அந்த வாலிபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

38 பேர் தனிமைப்படுத்தப் பட்டனர்

வெளிநாட்டில் இருந்து நேற்று 38 பேர் விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தனர். அவர்கள் குமரி மாவட்டத்திற்கு வந்த போது, களியக்காவிளை சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு, பரிசோதனைக்காக சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் குமாரகோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தனிமைப்படுத்தி தங்க வைக்கப்பட்டனர்.

Next Story