கொரோனாவை தடுக்க அரசு செலவிட்டது எவ்வளவு? - கர்நாடக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட சித்தராமையா வலியுறுத்தல்


கொரோனாவை தடுக்க அரசு செலவிட்டது எவ்வளவு? - கர்நாடக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட சித்தராமையா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 28 Jun 2020 11:20 PM GMT (Updated: 28 Jun 2020 11:20 PM GMT)

கொரோனாவை தடுக்க அரசு செலவிட்டது எவ்வளவு என்பது குறித்து கர்நாடக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று சித்தராமையா வலியுறுத்தியுள்ளார். கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த மாநில அரசு சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு மாநில அரசு தனது கஜானாவில் இருந்து இதுவரை எவ்வளவு செலவு செய்துள்ளது. இதில் தனிமை முகாம், சிகிச்சை, உடல் கவச உடை, செயற்கை சுவாச கருவி, பிராண வாயு (ஆக்சிஜன்) சிலிண்டர், முகக்கவசம், சானிடைசர் திரவம் போன்றவற்றுக்கு எவ்வளவு செலவானது என்பதை அரசு தெரியப்படுத்த வேண்டும்.

மத்திய அரசிடம் இருந்து இதுவரை வந்துள்ள நிதி மற்றும் மருத்துவ உபகரணங்கள் எவ்வளவு?. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு ஒதுக்கப்பட்டுள்ள படுக்கைகள் எவ்வளவு?. எந்த வழிகாட்டுதல் அடிப்படையில் தனியார் மருத்துவமனை சிகிச்சை கட்டணத்தை அரசு நிர்ணயித்துள்ளது?. இந்த அனைத்து விவரங்களையும் மக்களுக்கு தெரியப்படுத்த கர்நாடக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

நான் பல்வேறு துறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி, விவரங்களை வழங்குமாறு கேட்டுள்ளேன். ஆனால் அதிகாரிகள் சரியான தகவல்களை வழங்கவில்லை. இவ்வாறு தகவல்களை வழங்க மறுப்பது, எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் எனது உரிமைக்கு பங்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் அரசின் செயல்பாடுகள் மீது சந்தேகத்தை எழுப்புவதாக உள்ளது.

கர்நாடகத்தில் 9 மாவட்டங்களில் தேசிய அளவில் அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்திற்கு ஒரு நாள் முன்பு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது மாநிலத்தில் கொரோனாவுக்கு ஒருவர் கூட பலியாகவில்லை. அப்போது 26 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. நேற்று (அதாவது நேற்று முன்தினம்) நிலவரப்படி மாநிலத்தில் 11 ஆயிரத்து 923 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சாவு எண்ணிக்கை 190-ஐ தாண்டிவிட்டது. பெங்களூரு உள்பட சில நகரங்களில் மட்டுமே பரவி இருந்த கொரோனா, இப்போது கிராமப்புறங்களிலும் பரவிவிட்டது. இந்த கொரோனா திடீரென வந்துவிடவில்லை. படிப்படியாக பரவி இருக்கிறது. 3 மாத ஊரடங்கு காலத்தை, கொரோனாவை தடுக்க அரசு சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அந்த 3 மாத முக்கியமான காலத்தை இந்த அரசு பொறுப்பற்ற முறையில் வீணடித்துவிட்டது. ஊரடங்கின்போது பாதுகாப்பாக இருந்த கிராமங்கள் இப்போது, பயத்தில் உள்ளன. மாநில அரசு மீது இருந்த நம்பிக்கை மக்களுக்கு போய்விட்டது. மக்கள் பீதியில் உறைந்துபோய் உள்ளனர்.

பெங்களூருவில் அரசு ஆஸ்பத்திரிகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை ஏற்க தனியார் மருத்துவமனைகள் மறுத்துள்ளன. அந்த மருத்துவமனைகளுடன் அரசு பேசி சம்மதிக்க வைக்க வேண்டும். இல்லாவிட்டால் அத்தகைய மருத்துவமனைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொரோனா பரிசோதனையின் எண்ணிக்கையை 16 ஆயிரத்தில் இருந்து 11 ஆயிரமாக அரசு குறைத்துவிட்டது. கொரோனா சமுதாய பரவலாக மாறிவிட்டதாக பீதி எழுந்துள்ளது. கர்நாடகத்திற்கு 9,200 செயற்கை சுவாச கருவிகள் அவசரமாக தேவைப்படுகிறது. ஆனால் 1,500 கருவிகள் மட்டுமே உள்ளன. 33 ஆயிரம் செயற்கை சுவாச கருவிகளை வழங்கமாறு கர்நாடக அரசு கேட்டது.

ஆனால் மத்திய அரசு 90 கருவிகளை மட்டுமே அனுப்பியுள்ளது. ஆக்சிஜன் சிலிண்டர் 7 ஆயிரம் உள்ளது. ஆனால் இந்த ஆக்சிஜன் சிலிண்டர்களின் தேவை 20 ஆயிரமாக உள்ளது. மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளன. சந்தை விலையை விட 2 மடங்கு அதிகமாக அந்த உபகரணங்கள் வாங்கப்பட்டு உள்ளன. இவ்வாறு ரூ.3,300 கோடி முறைகேடு நடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதனால் கர்நாடக அரசு கொரோனாவை தடுக்க எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். அரசு பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டால், காங்கிரஸ் கட்சி தீவிர போராட்டம் நடத்தும்.

இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Next Story