கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 2 வாலிபர்கள் ரெயிலில் இருந்து பாதியிலேயே இறங்கி சென்றதால் பரபரப்பு


கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 2 வாலிபர்கள் ரெயிலில் இருந்து பாதியிலேயே இறங்கி சென்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 29 Jun 2020 6:20 AM GMT (Updated: 29 Jun 2020 6:20 AM GMT)

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 2 வாலிபர்கள் ரெயிலில் இருந்து பாதி வழியிலேயே இறங்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஜோலார்பேட்டை,

கர்நாடக மாநிலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தனது சொந்த ஊருக்கு நேற்று காலை கர்நாடக மாநிலம் யஷ்வந்த்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து ஹவுரா செல்லும் டேராடூன் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த ரெயில் நேற்று காலை 11 மணிக்கு யஷ்வந்த்பூர் ரெயில் நிலையத்தில் புறப்பட்டு திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக ஹவுரா ரெயில் நிலையத்திற்கு நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4.45 மணியளவில் சென்றடைகிறது. இவர்கள் அனைவருக்கும் நேற்று முன்தினம் ரெயில் நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

2 பேருக்கு கொரோனா

இந்த நிலையில் நேற்று காலை புறப்பட்ட சிறப்பு ரெயிலில் பயணம் செய்யும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனை கர்நாடக சுகாதார துறையினர் அவர்களுக்கு செல்போன் மூலம் தெரிவித்தனர்.

கொரோனா உறுதியான 2 பேர் உள்பட 6 பேர் நண்பர்கள். இவர்கள் இந்த ரெயிலில் பயணம் செய்தனர்.

இதுகுறித்த தகவலை திருப்பத்தூர் கொரோனா கட்டுப்பாட்டு அதிகாரி டாக்டர் சுமதிக்கு கர்நாடக மாநில கொரோனா கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்தார். இதையடுத்து அவர் ஜோலார்பேட்டை ரெயில் நிலைய மேலாளர் சுந்தரமூர்த்திக்கு தெரிவித்தார். அதைத்தொடர்ந்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் மற்றும் டாக்டர் புகழேந்தி, சுகாதார ஆய்வாளர் கோபி மற்றும் நகராட்சி ஊழியர்கள் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்கு வந்தனர்.

பகல் 1.30 மணியளவில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து அதிலிருந்து 4 பேர் மட்டும் இறங்கினர். கொரோனா பாதித்த நபர்கள் 2 பேரும் ரெயிலில் இல்லை. இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

தேடுதல் வேட்டை

போலீசார் 4 பேரிடமும் விசாரணை மேற்கொண்டபோது, கொரோனா உறுதியான வாலிபர்கள் 2 பேர் தாமலேரிமுத்தூர் ரெயில்வே கேட் அருகே சிக்கனலுக்காக நின்ற போது இறங்கியதாக தெரிவித்தனர். அதன் பிறகு போலீசார் மற்றும் சுகாதாரத்துறையினர் தாமலேரிமுத்தூர் ரெயில்வே கேட் அருகே அவர்களை தேடி கண்டுபிடித்து சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் 4 நண்பர்களை ஜோலார்பேட்டை நகராட்சி நிர்வாகத்தினர் அழைத்து சென்று தனிமைப்படுத்தினர்.

ஓடும் ரெயிலில் பாதி வழியிலேயே கொரோனா உறுதியான வாலிபர்கள் இறங்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்த பெட்டியில் பயணம் செய்த பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர். 

Next Story