திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 180 ஆக உயர்வு


திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 180 ஆக உயர்வு
x
தினத்தந்தி 1 July 2020 6:30 AM IST (Updated: 1 July 2020 6:30 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளது.

திருப்பூர்,

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் தினமும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த 4 நாட்களாக பாதிப்பு 4 ஆயிரத்தை நெருங்கி வந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் நேற்று தமிழகத்தில் மட்டும் 3 ஆயிரத்து 943 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்தே வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பூர் அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:-

உடுமலை காந்திசோக் பகுதியை சேர்ந்த 23 வயது ஆண், 60 வயது ஆண், திருப்பூர் காந்திநகரை சேர்ந்த 31 வயது பெண், 15 வேலம்பாளையத்தை சேர்ந்த 21 வயது பெண், 28 வயது ஆண், வீரபாண்டி திருவள்ளூர் நகரை சேர்ந்த 33 வயது ஆண், அவினாசி மேரப்பகவுண்டர் தெருவை சேர்ந்த 54 வயது பெண், திருப்பூர் பாரதிநகரை சேர்ந்த 26 வயது ஆண், திருப்பூர் சீனிவாசன்நகரை சேர்ந்த 52 வயது பெண், 7 வயது சிறுமி, 56 வயது பெண், 3 வயது சிறுவன், 62 வயது ஆண், உடுமலை பூலாங்கிணறை சேர்ந்த 38 வயது ஆண், காங்கேயம் லட்சுமிநகரை சேர்ந்த 28 வயது பெண், 2 வயது சிறுவன், காங்கேயம் சிவன்மலையை சேர்ந்த 31 வயது ஆண், கணபதிபாளையம் எஸ்.எம்.சி. நகரை சேர்ந்த 44 வயது ஆண், 14 வயது சிறுவன், முதலிபாளையம் அப்துல்கலாம்நகரை சேர்ந்த 36 வயது பெண் ஆகிய 20 பேருக்கும் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதில் சிலர் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கும், சிலர் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்கள். சிலர் கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். தற்போது இவர்களது பகுதிகளில் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று சந்தேகம் இருக்கிறவர்கள் சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு 160 ஆக இருந்தது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story