மாவட்ட செய்திகள்

கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் 300 டன் கழிவுகள் பாதுகாப்பான முறையில் அகற்றம்: மாநகராட்சி கமிஷனர் தகவல் + "||" + Safe disposal of 300 tons of waste in corona controlled areas: Corporation Commissioner Information

கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் 300 டன் கழிவுகள் பாதுகாப்பான முறையில் அகற்றம்: மாநகராட்சி கமிஷனர் தகவல்

கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் 300 டன் கழிவுகள் பாதுகாப்பான முறையில் அகற்றம்: மாநகராட்சி கமிஷனர் தகவல்
சென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் 300 டன் கழிவுகள் பாதுகாப்பான முறையில் அகற்றப்பட்டு உள்ளதாக மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் கூறினார்.
சென்னை, 

சென்னை அசோக்நகரில் கொரோனா தடுப்பு பணிகளை மாநகராட்சி கமிஷனர்கோ.பிரகாஷ் நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கொரோனா தொற்றால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் வீட்டு தனிமையில் இருப்பவர்கள் பயன்படுத்தும் முககவசங்கள், கையுறைகளை மத்திய சுகாதாரத்துறை, ஐ.சி.எம்.ஆர். மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் வழிமுறைகளின்படி பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துவதற்காக ஒரு வீட்டுக்கு 5 மஞ்சள் நிறப்பைகள் கொடுக்கப்படுகிறது.

அவர்கள் பயன்படுத்திய முககவசம், கையுறைகளை அந்த பைகளில் வைத்து மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் அப்புறப்படுத்தப்படுகிறது. இந்த கழிவுகள் ஆயிரம் முதல் 1,500 டிகிரி வெப்பநிலையில் எரித்து சாம்பலாக்கப்படுகிறது. தினசரி இது போன்ற கழிவுகள் 5 முதல் 6 டன் அளவில் சென்னையில் சேகரிக்கப்படுகிறது. இதுவரை 300 டன் கழிவுகளுக்கு மேல் பாதுகாப்பான முறையில் மணலியில் உள்ள ஆலையில் எரிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் முழு ஊரடங்கு மற்றும் கொரோனா பரிசோதனையை அதிகரித்ததன் காரணமாக தொற்று பாதிப்பு குறைந்து உள்ளது. இதுவரை காய்ச்சல் முகாமில் 10 லட்சம் நபர்களுக்கு மேல் கலந்துகொண்டு பயன்பெற்றுள்ளனர். தினந்தோறும் 40 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். அதன்படி 4 லட்சத்து 37 ஆயிரம் பேர் தனிமையில் உள்ளனர்.

சென்னையில் 80 சதவீதம் பேர் முககவசம் அணிகின்றனர். இளைஞர்கள் மத்தியில் முககவசம் அணிவது குறித்து இன்னும் விழிப்புணர்வு தேவை. முககவசம் அணியாமல், கையுறைகள் அணியாமல் பணிக்கு வரும் தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்காமல் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்படுகிறார்கள். கொரோனாவால் பாதிக்கபட்ட 375 மாநகராட்சி பணியாளர்களில் 120 நபர்களுக்கு மேல் பூரண குணமடைந்து பணிக்கு திரும்பி உள்ளனர்.

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு மழை பெய்தால் நூறு இடங்களில் மட்டுமே மழை நீர் தேங்கும் நிலை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வில் துணை கமிஷனர் ஜெ.மேகநாத ரெட்டி, மத்திய வட்டார துணை கமிஷனர் பி.என்.ஸ்ரீதர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.