சாத்தான்குளம் போலீசார் மீது புகார்: தொழிலாளியிடம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விசாரணை


சாத்தான்குளம் போலீசார் மீது புகார்: தொழிலாளியிடம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
x
தினத்தந்தி 31 July 2020 12:39 AM GMT (Updated: 31 July 2020 12:39 AM GMT)

சாத்தான்குளம் போலீசார் மீது புகார் கூறிய தொழிலாளியிடம், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தினார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே ஆசீர்வாதபுரம் மீரான்குளத்தைச் சேர்ந்தவர் சாமுவேல். இவருடைய மகன் யாக்கோபு ராஜ். பனையேறும் தொழிலாளி.

கடந்த மே மாதம் 23-ந்தேதி சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுகணேஷ், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஆகியோர் தன்னை தாக்கியதாகவும், பொய் வழக்குப்பதிவு செய்து கைது செய்ததாகவும் கூறி, யாக்கோபு ராஜ் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரிடம் புகார் மனு கொடுத்து இருந்தார்.

கூடுதல் சூப்பிரண்டு விசாரணை

இந்த மனு குறித்து, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செல்வன் நேற்று விசாரணை நடத்தினார். இந்த விசாரணையின்போது யாக்கோபு ராஜ் நேரில் ஆஜரானார்.

அதேபோன்று அவர் மீது போடப்பட்ட வழக்கில் புகார்தாரராக காட்டப்பட்டு இருந்த தங்கவேலு என்பவரும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தார். அவரும் சாத்தான்குளம் போலீசார் தன்னை தாக்கியதாகவும், தன்னிடம் வெள்ளைத்தாளில் கையெழுத்து பெற்று, யாக்கோபு ராஜ் மீது வழக்குப்பதிவு செய்து இருப்பதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு கொடுத்தார்.

சாத்தான்குளம் போலீசார் மீது தொடர்ச்சியாக புகார் மனுக்கள் குவிந்த வண்ணம் இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story