நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: திருப்பூரில் 15 வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது
நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் திருப்பூர் அணைமேடு பகுதியில் 15 வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்தது.
திருப்பூர்,
திருப்பூர் பெத்திசெட்டிபுரம் அணைமேடு பகுதியில் நொய்யல் ஆற்றின் கரையோரம் தாழ்வான பகுதியில் மக்கள் வீடுகளை கட்டி வசித்து வருகிறார்கள். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் தற்போது நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் இரவு முதல் வெள்ளத்தின் அளவு அதிகரித்துள்ளது. இதன்காரணமாக அணைமேடு பகுதியில் உள்ள 25 குடும்பத்தினரை நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் தங்குவதற்கு வடக்கு தாசில்தார் பாபு ஏற்பாடு செய்தார்.
ஆனால் அணைமேடு பகுதி மக்கள் பாதுகாப்புடன் அங்கேயே இருப்பதாக தெரிவித்தனர். மேலும் நொய்யல் ஆற்றில் ஆகாய தாமரை அதிகளவு படர்ந்து தண்ணீர் செல்வதற்கு சிரமம் உள்ளதால் அவற்றை அப்புறப்படுத்துவதற்கு தீயணைப்பு நிலைய வீரர்களிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவற்றை அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று மாலை அணைமேடு பகுதியில் உள்ள 15 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. நொய்யல் ஆற்றில் வெள்ளத்தின் அளவு அதிகரிக்க கரையோரம் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்து நின்றது. இதனால் அங்கிருந்த மக்கள் வீட்டில் இருந்து வெளியே வந்தனர். தகவல் அறிந்ததும் வருவாய்த்துறை அதிகாரிகள் சென்று ஆய்வு செய்து பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தினார்கள்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, நொய்யல் ஆற்றின் குறுக்கே பிரதான குடிநீர் குழாய் செல்கிறது. ஆற்றில் அடித்து வரப்பட்ட ஆகாயதாமரை இந்த குழாய் பகுதியில் சிக்குவதால் வெள்ளம் பாய்ந்து செல்ல வழியின்றி வீடுகளை சூழ்ந்து விட்டது. எனவே நொய்யல் ஆற்றில் படர்ந்துள்ள ஆகாய தாமரையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
அணைப்பாளையம் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் அதிகம் சென்றது. இதனால் நேற்று 2-வது நாளாக அணைப்பாளையம் தரைப்பாலம் வழியாக போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டது. மத்திய போலீசார் அங்கு பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.
Related Tags :
Next Story