நெல்லையில் விநாயகர், அம்மன் கோவில்கள் திறக்கப்பட்டன: பக்தர்களுக்கு அனுமதி


நெல்லையில் விநாயகர், அம்மன் கோவில்கள் திறக்கப்பட்டன: பக்தர்களுக்கு அனுமதி
x
தினத்தந்தி 11 Aug 2020 1:09 AM GMT (Updated: 11 Aug 2020 1:09 AM GMT)

ஊரடங்கு தளர்வையொட்டி நெல்லை மாநகரத்தில் உள்ள விநாயகர், அம்மன் கோவில்கள் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

நெல்லை, 

கொரோனா தொற்று பரவுவதை தடுக்க மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்காகவே தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்கள், மசூதிகள், கிறிஸ்தவ ஆலயங்களை திறப்பதற்கும், பொதுமக்கள் வழிபாடு நடத்துவதற்கும் அரசு தடை விதித்தது. கோவில்களில் ஆகம விதிப்படி பூஜைகள் மட்டும் நடந்தது. அதில் பக்தர்கள் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருக்கல்யாணம், அழகர் கோவில் திருவிழா, நெல்லையப்பர் கோவில் திருவிழா உள்ளிட்டவைகள் வீடியோவில் ஒளிபரப்பப்பட்டன.

இந்த நிலையில் கடந்த மாதம் கிராமங்களில் உள்ள சிறிய கோவில்களை திறந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அரசு அனுமதி வழங்கியது. இதைதொடர்ந்து நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள சிறிய கோவில்களான அம்மன் கோவில்கள், சுடலை மாடசாமி கோவில்களை பக்தர்கள் திறந்து வழிபட்டனர்.

ஆடி மாதங்களில் உள்ள வெள்ளிக்கிழமைகளில் சுடலை மாடசாமி, கருப்பசாமி கோவில்களுக்கு கொடை விழா நடத்தப்படும். இந்த ஊரடங்கையொட்டி மேளதாளம், வில்லிசை வைக்காமல் சிறிய அளவில் ஒரு நேரத்து கோவில் கொடையை மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முக கவசம் அணிந்தும் நடத்தினார்கள்.

இந்தநிலையில் தற்போது மாநகராட்சி பகுதியில் உள்ள சிறிய கோவில்களை அதாவது ஆண்டுக்கு ரூ.10 ஆயிரத்திற்கு குறைவான வருமானம் வருகின்ற கோவில்களை திறக்கலாம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு இருந்தார். இதைத்தொடர்ந்து நேற்று நெல்லை மாநகரத்தில் உள்ள சிறிய கோவில்களான விநாயகர் கோவில்கள், முப்புடாதி அம்மன், துர்க்கையம்மன், மாரியம்மன் உள்ளிட்ட கோவில்களை திறந்து பக்தர்களின் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்பட்டது.

நெல்லை டவுனில் உள்ள திரிபுரசுந்தரி அம்மன் கோவில், மாரியம்மன் கோவில், முப்புடாதி அம்மன்கோவில், உச்சிமாகாளி அம்மன் கோவில், அரசடி விநாயகர் கோவில், கல்யாண விநாயகர் கோவில், சாஸ்தா கோவில் ஆகிய கோவில்கள் நேற்று காலையில் திறக்கப்பட்டன. இங்கு பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர். ஆனால் அரசு உத்தரவுப்படி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படவில்லை.

பக்தர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களுடைய கோவில்களில் சாமி தரிசனம் செய்து மகிழ்ச்சியுடன் சென்றனர். சிலர் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினார்கள்.

Next Story