மயிலாடுதுறை அருகே நள்ளிரவில் துணிகரம்: தூங்கிக்கொண்டு இருந்த தம்பதியை தாக்கி நகை-பணம் கொள்ளை


மயிலாடுதுறை அருகே நள்ளிரவில் துணிகரம்: தூங்கிக்கொண்டு இருந்த தம்பதியை தாக்கி நகை-பணம் கொள்ளை
x
தினத்தந்தி 24 Sep 2020 3:06 AM GMT (Updated: 24 Sep 2020 3:06 AM GMT)

மயிலாடுதுறை அருகே நள்ளிரவில் தூங்கிக்கொண்டு இருந்த தம்பதியை தாக்கி நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர். கொள்ளையர்கள் தாக்கியதில் விவசாயியின் கை முறிந்தது.

குத்தாலம்,

மயிலாடுதுறையை அடுத்த குத்தாலம் தாலுகா மங்கைநல்லூர் அருகே கழனிவாசல் கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் பால்ராஜ்(வயது 60). விவசாயியான இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டி விட்டு தனது மனைவி விஜயா மற்றும் தாயாருடன் தூங்கிக்கொண்டு இருந்தார்.

நள்ளிரவில் ஏதோ சத்தம் கேட்டு பால்ராஜ் எழுந்து பார்த்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் பார்த்தபோது அங்கு இருந்த பீரோவை திறந்து அதில் வைக்கப்பட்டு இருந்த ரூ.50 ஆயிரம் மற்றும் 7 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துக்கொண்டு இருந்தது தெரிய வந்தது.

தாலி சங்கிலி பாதி தப்பியது

உடனே பால்ராஜ், அவர்களை தடுக்க முயன்றார். அப்போது கொள்ளையர்கள் பால்ராஜை சரமாரியாக தாக்கினர். இதில் அவரின் கை முறிந்தது. சத்தம் கேட்டு கண்விழித்த பால்ராஜின் மனைவி விஜயா கொள்ளையர்களிடம் இருந்து தனது கணவரை காப்பாற்ற போராடினார். கணவன்-மனைவி இருவரும் போராடியபோது கொள்ளையர்கள் பீரோவில் இருந்து எடுத்த 7 பவுன் சங்கிலியை தவற விட்டனர்.

இந்த சம்பவத்தின்போது கொள்ளையர்கள் விஜயாவை தாக்கி அவர் அணிந்து இருந்த தாலி சங்கிலியை பறித்தனர். சங்கிலியை பறிக்க விடாமல் மர்ம நபர்களிடம் விஜயா போராடியதால் பாதி சங்கிலி மட்டும் தப்பியது. கொள்ளையர்களிடம் 5 பவுன் சங்கிலி சிக்கிக்கொண்டது. கொள்ளையர்கள் சங்கிலியை பறித்ததில் விஜயாவின் கழுத்தில் காயம் ஏற்பட்டது.

தப்பியோட்டம்

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடி வருவதை அறிந்த கொள்ளையர்கள் பீரோவில் இருந்து எடுத்த ரூ.50 ஆயிரம் மற்றும் விஜயாவிடம் பறித்த 5 பவுன் சங்கிலியுடன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரம்பூர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நள்ளிரவில் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த கணவன்-மனைவியை தாக்கி பணம்-நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story