நாமக்கல், ராசிபுரத்தில் கொரோனா பரவலை தடுக்க நகை கடைகள் அடைப்பு


நாமக்கல், ராசிபுரத்தில் கொரோனா பரவலை தடுக்க நகை கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 25 Sept 2020 9:19 AM IST (Updated: 25 Sept 2020 9:19 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாமக்கல், ராசிபுரத்தில் நகை கடைகள் அடைக்கப்பட்டன.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் சமீப காலமாக கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் நாமக்கல், ராசிபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நாமக்கல் கடைவீதியில் 50-க்கும் மேற்பட்ட நகை கடைகள் உள்ளன. இவற்றில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் நகைகடை அதிபர்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

இதையடுத்து நாமக்கல் நகர நகை வியாபாரிகள் சங்கம் சார்பில் கொரோனா பரவலை தடுக்க 4 நாட்கள் நகை கடைகள் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று நாமக்கல் நகரில் உள்ள அனைத்து நகை கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் நேற்று நகை வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். வருகிற 27-ந் தேதி வரை நகை கடைகள் அடைக்கப்பட்டு இருக்கும் எனவும், இதை மீறி கடையை திறந்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் எனவும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ராசிபுரம்

இதேபோல், ராசிபுரம் நகரில் உள்ள சிறிய மற்றும் பெரிய நகை கடைகள் மற்றும் நகை தொழிற்கூடங்கள் கொரோனா வைரஸ் நோய் பரவுவதை தடுக்கும் வகையில் 4 நாட்களுக்கு மூடப்படுவதாக நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்து இருந்தனர். அதன்படி நேற்று ராசிபுரம் நகரில் உள்ள நகை கடைகள் திறக்கப்படவில்லை. இதனிடையே நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதத்தில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வரை அனைத்து நகை கடைகளும் மூடப்பட்டு இருக்கும் என நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Next Story