ராய்ச்சூரில் நகரசபை உறுப்பினர் கொலையில் 2 பேர் துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு மேலும் 4 பேர் கைது


ராய்ச்சூரில் நகரசபை உறுப்பினர் கொலையில் 2 பேர் துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு மேலும் 4 பேர் கைது
x
தினத்தந்தி 30 Sept 2020 4:24 AM IST (Updated: 30 Sept 2020 4:24 AM IST)
t-max-icont-min-icon

ராய்ச்சூரில் நகரசபை உறுப்பினர் கொலையில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 2 பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்துள்ளனர்.

ராய்ச்சூர்,

ராய்ச்சூர் டவுன் சதார் பஜார் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஜாகீர் உசேன் சர்க்கிள் பகுதியில் வசித்தவர் மக்பல்(வயது 42). ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த இவர் ராய்ச்சூர் நகரசபையின் 8-வது வார்டு உறுப்பினராக இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மக்பல் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்தார்.

அப்போது மக்பலை வழிமறித்த 6 பேர் கும்பல் அவரிடம் தகராறு செய்தது. மேலும் தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் மக்பலை அந்த கும்பல் சரமாரியாக தாக்கியது. இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த மக்பல் உயிருக்கு போராடினார். பின்னர் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். உயிருக்கு போராடிய மக்பலை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் மக்பல் இறந்து விட்டார்.

இதுபற்றிய தகவல் அறிந்த சதார் பஜார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் ஆஸ்பத்திரிக்கு சென்று மக்பலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் சிக்காம், சம்பவம் நடந்த இடத்துக்கும், ஆஸ்பத்திரிக்கும் சென்று விசாரணை நடத்தினார்.

போலீஸ்காரர்கள் மீது தாக்குதல்

இந்த கொலை சம்பவம் குறித்து சதார் பஜார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அப்போது மக்பலை, முன்னாள் நகரசபை உறுப்பினர் கோரா மசூம், தனது கூட்டாளிகளான தத்தா என்கிற அசாமுதீன், ரியாஸ், முகமது யாசின், அப்சர், காசிநாத் ஆகியோருடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. அவர்களை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டினர். இந்த நிலையில் கோரா மசூம் தனது கூட்டாளிகளுடன் ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக சதார் பஜார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் அவர்களை கைது செய்ய நேற்று காலை சதார் பஜார் போலீசார் சென்றனர். பின்னர் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த 6 பேரையும் சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.

அப்போது தத்தாவும், ரியாசும் சேர்ந்து போலீஸ்காரர்களான எல்லப்பா, சந்திரகாந்த் ஆகியோரை ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பி ஓடினர். அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு சரண் அடைந்து விடும்படி தத்தா, ரியாசுக்கு எச்சரிக்கை விடுத்தார். ஆனால் அவர்கள் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஓடினர்.

2 பேர் சுட்டுப்பிடிப்பு

இதனால் இன்ஸ்பெக்டர் 2 பேரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் 2 பேரின் கால்களிலும் குண்டு துளைத்தது. இதனால் 2 பேரும் அங்கேயே சுருண்டு விழுந்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ராய்ச்சூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபோல தாக்குதலில் காயம் அடைந்த போலீஸ்காரர்களும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கைதான கோரா மசூமிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

அதாவது முன்னாள் நகரசபை உறுப்பினரான கோரா மசூம், நகரசபை தேர்தலில் தோல்வி அடைந்து உள்ளார். இதனால் தேர்தல் தொடர்பாக கோரா மசூமுக்கும், மக்பலுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்து உள்ளது. இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முன்விரோதம் காரணமாக மக்பலின் சகோதரரை கோரா மசூம் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்தார். தனது சகோதரரை கொலை செய்த கோரா மசூமை கொலை செய்ய மக்பல் திட்டம் தீட்டி வந்து உள்ளார். இதுபற்றி அறிந்த கோரா மசூம், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து மக்பலை தீர்த்துக்கட்டியது அம்பலமாகி உள்ளது.

பரபரப்பு

கைதான கோரா மசூம் மீது கொலை, கொலை முயற்சி உள்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கைதான 6 பேர் மீதும் சதார் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். நகரசபை உறுப்பினர் கொலை சம்பவமும், அதில் தொடர்புடைய 2 பேர் துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்ட சம்பவமும் ராய்ச்சூர் டவுனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 More update

Next Story