தூண் அமைக்க குழி தோண்டியபோது மின்சாரம் தாக்கி 2 பேர் பலி


தூண் அமைக்க குழி தோண்டியபோது மின்சாரம் தாக்கி 2 பேர் பலி
x
தினத்தந்தி 21 Oct 2020 4:35 AM IST (Updated: 21 Oct 2020 4:35 AM IST)
t-max-icont-min-icon

ஆவடி அருகே தூண் அமைக்க குழி தோண்டியபோது பூமிக்கு அடியில் சென்ற மின்சார வயரில் இரும்பு கைத்திருகு டிரில்லிங் எந்திரம் உரசியதில் மின்சாரம் தாக்கி 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

ஆவடி,

ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் சோழன் நகர் ஆடியபாதம் தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி (வயது 64). கட்டிட மேஸ்திரி. இவர், தனது வீட்டின் முன்பகுதியில் தூண் அமைக்க முடிவு செய்தார்.

இதற்காக நேற்று காலை திருமுல்லைவாயல் செந்தில் நகரைச்சேர்ந்த கட்டிடத்தொழிலாளி ஜெய்சங்கர் (50) என்பவருடன் சேர்ந்து கைகளை பயன்படுத்தி குழிதோண்டும் இரும்பு கைத்திருகு டிரில்லிங் எந்திரம் கொண்டு குழி தோண்டினார்.

மின்சாரம் தாக்கி 2 பேரும் பலி

சுமார் 2 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டியபோது, பூமிக்கு அடியில் சென்ற உயர் மின்அழுத்த மின்சார வயரில் இரும்பு டிரில்லிங் எந்திரம் உரசியதாக கூறப்படுகிறது. இதில் அதை பிடித்து கொண்டிருந்த கட்டிட மேஸ்திரி மாடசாமி, கட்டிடத்தொழிலாளி ஜெய்சங்கர் இருவரும் மின்சாரம் தாக்கி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த திருமுல்லைவாயல் போலீசார், பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story