தியாகராயநகர் நகை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி காதலியுடன் அதிரடி கைது


தியாகராயநகர் நகை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி காதலியுடன் அதிரடி கைது
x
தினத்தந்தி 27 Oct 2020 4:44 AM GMT (Updated: 27 Oct 2020 4:44 AM GMT)

சென்னை தியாகராயநகரில் 5 கிலோ நகை கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளி அவரது காதலியுடன் திருவள்ளூர் அருகே அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

சென்னை, 

சென்னை தியாகராயநகர் சாருல்லா தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரகுமார் (வயது 60). இவர் அதே பகுதியில் உள்ள மூசா தெருவில் இருக்கும் ஒரு வீட்டின் முதல் மாடியை வாடகைக்கு எடுத்து, அதில் உத்தம் ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகை மொத்த வியாபார கடையை நடத்தி வந்தார். தங்க-வைர நகைகளை செய்து நகை கடைகளுக்கு சப்ளை செய்து வந்தார்.

கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை இரவு இவரது கடைக்குள் பூட்டை உடைத்து புகுந்த முகமூடி ஆசாமி ஒருவர், அங்கிருந்த 5 கிலோ எடையுள்ள தங்க-வைர நகைகள் மற்றும் தங்க, வெள்ளிக்கட்டிகளை பெரிய பையில் அள்ளி கொள்ளையடித்து சென்றுவிட்டார்.

பரபரப்பான கேமரா காட்சி

கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில், கூடுதல் கமிஷனர் தினகரன் மேற்பார்வையில், தென்சென்னை இணை கமிஷனர் ஏ.ஜி.பாபு, தியாகராயநகர் துணை கமிஷனர் ஹரிகரபிரசாத், உதவி கமிஷனர் கலியன் ஆகியோர் போலீஸ் படையுடன் கொள்ளை போன கடைக்கு சென்று விசாரணை நடத்தினர். கொள்ளை ஆசாமி பற்றி துப்பு துலக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

சம்பவ இடம் மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் பொருத்தப்பட்டிருந்த 120 கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் 40 கேமராக்களில் கொள்ளையனின் உருவம் பதிவாகி இருந்தது.

ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 கொள்ளையர்களில் நகை கடைக்குள் சென்ற கொள்ளை ஆசாமி மட்டும் மோட்டார் சைக்கிளை விட்டு இறங்குகிறார். இன்னொருவர் மோட்டார் சைக்கிளில் சென்றுவிடுகிறார். நகை கடைக்குள் சென்ற கொள்ளையன் நகைகளை கொள்ளையடித்துவிட்டு அதிகாலை 4 மணி வரை தெரு ஓரமாக உட்கார்ந்திருக்கிறார். பின்னர் இறக்கிவிட்ட ஆசாமி மீண்டும் வந்து, காத்திருந்த ஆசாமியை மோட்டார் சைக்கிளில் அழைத்து செல்கிறார்.

காதலியுடன் கொள்ளையன் கைது

இந்த கேமரா காட்சியின் மூலம், கொள்ளையர்கள் இருவரில் கடைக்குள் நுழைந்த முக்கிய கொள்ளையன் சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சுரேஷ் என்ற மார்க்கெட் சுரேஷ் (வயது 43) என்பது தெரியவந்தது. அவர் திருவள்ளூர் மாவட்டம் புட்லூரில் பதுங்கி இருப்பதாக அவரது காதலி மூலம் தெரியவந்தது.

சுரேசை கைது செய்ய வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன் உத்தரவிட்டார். காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. சாமுண்டீஸ்வரி மேற்பார்வையில், திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் அதிரடி நடவடிக்கை எடுத்து கொள்ளையன் சுரேசை நேற்று இரவு கைது செய்தார். அவரது காதலியும் கைதானார். காதலிக்கு சுரேஷ் பரிசாக கொடுத்த 20 பவுன் தங்க நகைகளையும், 7 கிலோ வெள்ளிக்கட்டிகளையும் போலீசார் மீட்டனர்.

கொள்ளையன் சுரேஷ் மீது திருவள்ளூர் நகை கடையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வழக்கு நிலுவையில் உள்ளது என்றும், கொள்ளையடிக்கப்பட்ட மீதி நகைகளை மீட்கவும், இன்னொரு கொள்ளையனை பிடிக்க தேடுதல் வேட்டை நடப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Next Story