மனைவி கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


மனைவி கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 30 Oct 2020 4:48 AM IST (Updated: 30 Oct 2020 4:48 AM IST)
t-max-icont-min-icon

மனைவி கொலை வழக்கில் கைதானவர் மற்றும் திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

செந்துறை, 

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மருங்கூர் காலனி தெருவை சேர்ந்தவர் இளம்பரிதி(வயது 33). இவரது மனைவி எழிலரசி(31). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 7-ந் தேதி எழிலரசி இடையக்குறிச்சியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார். இந்நிலையில் அங்கு சென்ற இளம்பருதி மனைவியிடம் உல்லாசம் அனுபவிக்க முயன்றதாக தெரிகிறது. அதற்கு எழிலரசி மாதவிலக்கு காரணமாக மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளம்பருதி, தலையணையை பயன்படுத்தி எழிலரசியை கொலை செய்துவிட்டு, தூக்குப்போட்டு இறந்துவிட்டதாக நாடகமாடியதாக கூறப்படுகிறது.

பிரேத பரிசோதனையில், எழிலரசி கொலை செய்யப்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கொலை வழக்கு பதிந்த போலீசார், இளம்பரிதியை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய, அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் கலெக்டர் ரத்னா, இளம்பருதியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி குவாகம் போலீசார், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற் கான ஆணையை திருச்சி மத்திய சிறையில் இருக்கும் இளம்பருதியிடம் வழங்கினர்.

திருட்டில் ஈடுபட்டவர்கள்

இதேபோல் அரியலூரில் பெரம்பலூர் ரோட்டில் உள்ள காளியம்மன் கோவிலுக்கு அருகே உள்ள சைக்கிள், எலக்ட்ரிக்கல் கடையின் பூட்டை, கடந்த 8-ந் தேதி நள்ளிரவில் 3 பேர் உடைத்து திருட்டில் ஈடுபட்டனர். இதையடுத்து திருட்டில் ஈடுபட்ட ஈரோட்டை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, ராமநாதபுரத்தை சேர்ந்த செல்வம் என்ற செல்வராஜ், கடலூரை சேர்ந்த சிவப்பிரகாசம் ஆகியோரை அரியலூர் நகர போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அவர்கள் மீது ஏராளமான திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும், மேலும் தொடர்ச்சியாக திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதும் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து மேலும் குற்றச் சம்பவங்களில் ஈடுபடாமல் இருக்க அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க, அரியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன், அரியலூர் உட்கோட்ட துணை சூப்பிரண்டு மதன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆகியோர் பரிந்துரையின்பேரில், கலெக்டர் ரத்னா உத்தரவிட்டார்.

Next Story