நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் வக்கீல்கள் திடீர் போராட்டம்

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் வக்கீல்கள் நேற்று திடீர் போராட்டம் நடத்தினார்கள்.
நெல்லை,
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வக்கீல் செல்வன் தலைமையில் ஏராளமான வக்கீல்கள் நேற்று காலை திரண்டு வந்தனர்.
அப்போது வக்கீல் சுதாகர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரம் ஓட்டலில் நடந்த தாக்குதல் விவகாரத்தில் வக்கீல் பிரம்மா மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
வன்கொடுமை தடுப்பு சட்டம்
வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களின் பாதுகாப்புக்காகவும், உரிமைக்காகவும் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் தற்போது பட்டியல் இனத்தைச் சேராதவர்கள் இந்த சட்டத்தை கையிலெடுத்து, பிற சமுதாயத்தினரை பழிவாங்கும் நோக்கத்தோடு இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள்.
ஓட்டல் உரிமையாளர்களின் நிர்ப்பந்தத்தின் பேரில் போலீசார், பிரம்மா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக நெல்லை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க வந்திருக்கிறோம். வக்கீல் பிரம்மா மீது பொய்யான புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும். இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திடீர் போராட்டம்
பின்னர் வக்கீல்கள், கலெக்டர் ஷில்பாவை சந்தித்து மனு கொடுக்க சென்றனர். அப்போது அங்கு கலெக்டர் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த வக்கீல்கள், கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் படிக்கட்டில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டம் நடத்தினர். இதில் வக்கீல்கள் செந்தில்குமார், சிவசுப்பிரமணியன், ராஜன், வெங்கடாசலபதி, விஜி, ராஜா, பழனி, ரமேஷ், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேணுகோபால், அந்தோணி செல்வராஜ், அப்துல்காதர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
போராட்டம் நடத்திய வக்கீல்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் கலெக்டர் அலுவலக மேலாளர் வெங்கடாசலத்தை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்துச்சென்றனர்.
Related Tags :
Next Story