கார்த்திகை தீபத் திருநாளையொட்டி கோவில்களில் மகா தீபம்; சொக்கப்பனை கொளுத்தப்பட்டது


கார்த்திகை தீபத் திருநாளையொட்டி கோவில்களில் மகா தீபம்; சொக்கப்பனை கொளுத்தப்பட்டது
x
தினத்தந்தி 29 Nov 2020 11:29 PM GMT (Updated: 29 Nov 2020 11:29 PM GMT)

கார்த்திகை தீபத்திருநாளையொட்டி கோவில்களில் மகா தீபம் ஏற்றப்பட்டது. சொக்கப்பனையும் கொளுத்தப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

புதுக்கோட்டை,

கார்த்திகை மாதத்தில் பவுர்ணமி நாளும், கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த நாள் தான் திருக்கார்த்திகை தீப திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் இதுவும் ஒன்றாகும். திருக்கார்த்திகை அன்று கோவில்கள், வீடுகளில் தீபங்கள் ஏற்றி வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதிலும் கோவில்களில் மகா தீபம் ஏற்றப்படும்.

அதன்படி நேற்று கார்த்திகை தீப திருவிழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவில்களில் மகா தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. புதுக்கோட்டை நகரில் பிரசித்தி பெற்ற சாந்தநாதசாமி கோவிலில் நேற்று மாலை 6 மணிக்கு மேல் கோவிலின் நுழைவுவாயில் கோபுரத்தின் மேல் மகாதீபம் ஏற்றப்பட்டது. மேலும் சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். சாமிக்கு சிறப்பு பூஜை முடிந்ததும் கோவில் முன்பு தென்னை ஓலையால் வைக்கப்பட்டிருந்த சொக்கப்பனை முன்பு பூஜை நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து அம்பாள் சன்னதிக்கு எதிரே நுழைவு வாயில் பகுதியில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

வீடுகளில் அகல் விளக்குகள் ஏற்றம்

வழக்கமாக வெளிப்பகுதியில் சாமி ஊர்வலம் நடைபெறும், ஆனால் இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் உள் பிரகாரத்தில் வலம் வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவில் முழுவதும் அகல்விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன.

இதேபோல திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவிலில் திருக்கார்த்திகையையொட்டி சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது. வீடுகளிலும் அகல்விளக்குகள் ஏற்றி பொதுமக்கள் வழிபாடு நடத்தினர். வீட்டின் முன்பு பலர் பட்டாசுகளை வெடித்தும், கம்பி மத்தாப்பூ கொளுத்தியும் திருக்கார்த்திகையை கொண்டாடினர்.

பொன்னமராவதி

பொன்னமராவதி ஆவுடைநாயகி சமேத சோழீஸ்வரர் சிவன் கோவில், தேனிமலை முருகன் கோவில், வலையப்பட்டி மலையாண்டி கோவில், மேலைச்சிவபுரி மீனாட்சி சொக்கநாதர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் கார்த்திகை தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தி பின்பு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

இதேபோல, திருக்களம்பூரில் மேலக்களத்தை சேர்ந்த மேலமடம் வெள்ளையப்பசாமி மடத்தில் அப்பகுதி பக்தர்கள், திருக்களம்பூர் மற்றும் வையாபுரிபட்டியை சேர்ந்த பொதுமக்கள் இணைந்து அன்னதானம் வழங்கினர். முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது.

திருவரங்குளம்-ஆலங்குடி

திருவரங்குளத்தில், மிக உயரமான ராஜகோபுரம் அமையப்பெற்ற சிவன் கோவிலில் 100 அடி உயரமுள்ள ராஜகோபுரத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக கோவில் முழுவதும் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு கோவில் சன்னதியில் உள்ள சிவபெருமான், விநாயகருக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று சந்திரசேகர சுவாமிகள் பிரகார விழா நடைபெற்று கோவில் முன்பாக உள்ள திடலில் சொர்க்கப் பனை கொளுத்தப்பட்டது.

ஆலங்குடியில் உள்ள நாடியம்மமனுக்கு பால், எலுமிச்சை, மஞ்சள், இளநீர், பஞ்சாமிர்தம், தேன் உள்பட 16 வகைப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பெண்கள் அபிராமி அந்தாதி முற்றோதல் செய்தனர். அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

கீரனூர்-கந்தர்வகோட்டை

கீரனூர் தேரடி பகுதியில் அமைந்துள்ள கருப்பர் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. கோட்டைமேடு விநாயகர் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

கந்தர்வகோட்டை ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு, சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. இதேபோல, கந்தர்வகோட்டை தர்மசாஸ்தா கோவிலில் தீபம் ஏற்றி வழிபாடு நடைபெற்றது. அப்போது சொக்கப்பனை தீபம் அய்யப்பன் திருவுருவம் போல் காட்சி அளித்ததால் அய்யப்ப பக்தர்கள் அனைவரும் கைகூப்பி வணங்கினர்.

ஆவுடையார்கோவில்-திருமயம்

திருமயம் சத்தியகிரீஸ்வரர் கோவில் வாசலில் சொக்கப்பனை உற்சவம் நடைபெற்றது. அப்போது சத்தியகிரீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் கோவில் வாசலில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோன்று மாலை 6.30 மணிக்கு சத்தியமூர்த்தி பெருமாள் கோவில் வாசலில் சொக்கப்பனை உற்சவம் நடைபெற்றது. சத்தியமூர்த்தி பெருமாள் கோவில் வாசலில் அருள்பாலித்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்த இரண்டு கோவில்களிலும் சுவாமி திருவீதி உலா நடைபெறவில்லை.

ஆவுடையார்கோவில் ஆத்மநாத சுவாமி கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு, கோவிலில் உள்ள முருகபெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அர்ச்சனைகள் நடைபெற்றது. திருப்புனவாசல் விருத்தபுரீஸ்வரர் கோவிலில் அண்ணாமலையார் தீபம் ஏற்றப்பட்டு, சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

விராலிமலை-அன்னவாசல்

புதுக்கோட்டை திருக்கோவில்களை சேர்ந்த குமரமலை பாலதண்டாயுதபாணி மலைக்கோவில் சிறப்பு பெற்ற கோவில் தலமாகும். இங்கு முருகன் பாலனாக காட்சியளிப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பு. இங்கு நேற்று காலை முருகப்பெருமானுக்கு பால், பஞ்சாமிர்தம், தயிர், பன்னீர், மஞ்சள், பச்சை அரிசி மாவு, திரவியப்பொடி, சந்தனம் உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடந்தது. மாலை மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. கோவில் முன்பு பக்தர்களின் சரணகோஷம் முழங்க மகாதீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து கோயில் அடிவாரத்தில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விராலிமலை முருகன் கோவிலில் காலையில் மலைமேல் முருகன், வள்ளி தெய்வானைக்கு வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகங்கள் நடைபெற்றது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை மலைமேல் உள்ள தீப கோபுரத்தில் நெய் ஊற்றி தீபம் ஏற்றப்பட்டது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் கண்ணன் தலைமையில் கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

அன்னவாசல் அருகே உள்ள மெய்வழிச்சாலையில் நேற்று கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி காலை பவுர்ணமி கொடியேற்று விழா நடைபெற்றது. பின்னர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இந்த தீப விழாவானது, தொடர்ந்து 3 நாட்கள் நடக்கிறது. இதில், உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் திரளான மெய்வழிச்சாலையினர் கலந்து கொண்டனர்.

Next Story