திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா: 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது


திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா: 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது
x
தினத்தந்தி 30 Nov 2020 3:59 AM GMT (Updated: 30 Nov 2020 3:59 AM GMT)

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு சிகர நிகழ்ச்சியாக 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அப்போது நகரமே ஒளி வெள்ளத்தில் மிதந்தது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் உள்ள உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாக விளங்குகிறது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் இக்கோவிலில் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும் கார்த்திகை மாதத்தில் நடக்கும் தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும்.

திருமாலுக்கும், பிரம்மாவுக்கும் இடையே ஏற்பட்ட “தான்“ என்ற அகந்தையை போக்க சிவபெருமான் திருவண்ணாமலையில் அடிமுடி காண முடியாத அக்னி பிழம்பாக காட்சியளித்ததாக ஐதீகம். அந்த நாளே இக்கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இங்குள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலையை அண்ணாமலை என்று பெயர் சூட்டி சிவனாக வணங்கி வருகின்றனர். கார்த்திகை தீபத் திருவிழா 10 நாட்கள் நடைபெறும் விழாவாகும். சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சி அளித்த தீபத்திருநாளான 10-ம் நாள் விழாவின்போது அதிகாலை கோவில் வளாகத்தில் “பஞ்ச பூதங்களாக திகழ்வதும் இறைவனே” என்பதை விளக்கும் வகையிலும், உலகத்தின் இயக்கத்தை நடத்துவதும், உயிர்களை காப்பதும் “ஜோதி”தான் என்பதை விளக்கும் வகையிலும் கருவறைக்கு எதிரே உள்ள அர்த்த மண்டபத்தில் சூரிய பகவான் முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். பின்னர் பரணி தீபம் அனைத்து சன்னதிகளுக்கும் எடுத்து செல்லப்படும். தொடர்ந்து மாலையில் மலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்.

பக்தர்களுக்கு அனுமதி ரத்து

இந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாகவும், ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமலில் உள்ளதாலும் கோவிலில் உற்வச நிகழ்ச்சிகள் நடைபெறும் போது பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டு இருந்தது. மேலும் பக்தர்கள் அதிகளவில் கூடுவார்கள் என்பதால் வழக்கமாக காலை மற்றும் இரவில் நடைபெறும் சாமி மாட வீதிஉலாவும் தடை செய்யப்பட்டது. மகா தீபத்தின் போதும், பவுர்ணமியின் போதும் பக்தர்கள் கிரிவலம் செல்லவும் மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டது.

இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆகம விதிகளின்படி சாமி உற்சவ உலா நிகழ்ச்சிகள் கோவிலில் வளாகத்தில் உள்ள 5-ம் பிரகாரத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் 5-ம் பிரகாரத்தில் உலா வந்தனர்.

பரணிதீபம்

விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று மாலை 6 மணியளவில் 2 ஆயிரத்து668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுவதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பின்னர் கோவில் கருவறைக்கு எதிரே உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை சிவாச்சாரியார்கள் செய்தனர். அதன்படி அருணாசலேஸ்வரருக்கு தீபாராதனை செய்யப்பட்டதும், வேதமந்திரங்கள் முழங்க அதிகாலை 3.50 மணியளவில் பரணி தீபம் ஏற்றினர்.

பின்னர் அதிலிருந்து பஞ்சமுக தீபம் ஏற்றப்பட்டது. அப்போது அங்கிருந்தவர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என பக்தி பரவசத்துடன் முழங்கி தீபத்தை வழிபட்டனர். தொடர்ந்து பரணி தீபம் கோவில் பிரகாரத்தை சுற்றி வலம் வந்து வைகுந்த வாயில் வழியாக மகா தீபம் ஏற்றப்படும் மலைக்கு காட்சி கொடுக்கப்பட்டது. அங்கிருந்து உண்ணாமலை அம்மன் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பஞ்சமுக தீபம் ஏற்பட்டது. அம்மன் சன்னதி, சாமி சன்னதிகளுக்கு வெளியே தரிசனத்திற்காக பரணி தீபம் கொண்டு வரப்பட்டு கால பைரவர் சன்னதியில் வைக்கப்பட்டது.

அர்த்தநாரீஸ்வரர்

இதையடுத்து கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் சுப்ரமணியர் சுவாமி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில் கோவிலில் சாமி சன்னதியில் இருந்து பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், அருணாசலேஸ்வரர் சமேத உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் ஆடியபடி தனித்தனியாக வெளியே வந்து சாமி சன்னதி முன்பு உள்ள தீப மண்டபத்தில் இருந்த தங்க விமானத்தில் எழுந்தருளினர்.

அதைத்தொடர்ந்து சுமார் 6 மணியளவில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர், சாமி சன்னதியில் இருந்து ஆடியபடியே கொடிமரம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

மகாதீபம்

பின்னர் சாமி சன்னதி முன்பு அகண்டதீபம் ஏற்றப்பட்டது. அதே நேரத்தில் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து வீடுகளில் அகல் விளக்கு ஏற்றி வைத்து பொதுமக்கள் வழிபட்டனர். வீடு, கடை, வணிக வளாகங்களில் மின் விளக்கை எரிய செய்தனர். இதனால் நகரமே ஒளி வெள்ளத்தில் ஜொலித்தது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நேற்றுமுன்தினம் காலையில் இருந்து பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டது.

நிகழ்ச்சிகளின் போது கோவில் பணியாளர்கள், தீபத் திருவிழா ஏற்பாடு குறித்த துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும் நேற்று கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் தொலைக்காட்சி, யூடியூப், கோவில் இணைய தளம், அரசு கேபிள் தொலைக்காட்சி மற்றும் உள்ளூர் தொலைக்காட்சிகள் மூலமாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், கலெக்டர் சந்தீப்நந்தூரி, வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, மாவட்ட முதன்மை நீதிபதி திருமகள், மாவட்ட ஆவின் தலைவர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பா.ஜ.க. வர்த்தக அணி மாநில துணைத்தலைவர் எஸ்.தணிகைவேல், ஆலத்தூர் ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளி தாளாளர் ஜி.பர்வதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தெப்பல் உற்சவம்

கோவிலில் வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மகா தீபம் காண திருவண்ணாமலை நகருக்கு வெளியூரில் இருந்து வரும் பக்தர்களை தடை செய்யும் வகையில் நேற்று முன்தினம் மாவட்ட எல்லை மற்றும் நகர எல்லை பகுதிகளில் போலீசார் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிப்பு பணிகள் ஈடுபட்டனர். மேலும் மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி உச்சிக்கு செல்வார்கள். ஆனால் இந்த ஆண்டு பக்தர்கள் மலையேற சென்ற பக்தர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்ததால் கிரிவலப்பாதை வெறிச்சோடி காணப்பட்டது. தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) சந்திரசேகரர் தெப்பல் உற்சவம், நாளை (செவ்வாய்க்கிழமை) பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவம், நாளை மறுநாள் (புதன்கிழமை) சுப்பிரமணியர் தெப்பல் உற்சவம் நடைபெற உள்ளது. வழக்கமாக தெப்பல் உற்சவ நிகழ்ச்சிகள் அய்யங்குளத்தில் நடைபெறும். இந்த ஆண்டு தெப்பல் உற்சவம் கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் நடைபெற உள்ளது. 3-ந் தேதி (வியாழக்கிழமை) சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

Next Story