உளுந்தூர்பேட்டையில் ஸ்டூடியோ உரிமையாளர் அடித்துக் கொலை


உளுந்தூர்பேட்டையில் ஸ்டூடியோ உரிமையாளர் அடித்துக் கொலை
x
தினத்தந்தி 30 Nov 2020 6:29 AM GMT (Updated: 30 Nov 2020 6:29 AM GMT)

உளுந்தூர்பேட்டையில் ஸ்டூடியோ உரிமையாளரை அடித்துக் கொலை செய்து விட்டு, அவரது உடலை ஏரியில் வீசிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

உளுந்தூர்பேட்டை,

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பாளையம்பட்டு மேட்டுதெருவை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் மணிகண்டன்(வயது 30). திருமணம் ஆகாத இவர், ஸ்டூடியோ நடத்தி வந்தார். மணிகண்டன் நேற்று முன்தினம் வெளியே சென்றார். இரவு நீண்ட நேரமாகியும் அவர், வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும், மணிகண்டன் கிடைக்கவில்லை.

அடித்துக் கொலை

இதற்கிடையே உளுந்தூர்பேட்டை பிரகாஷ்நகர் அருகே உள்ள பெரிய ஏரியில் நேற்று காலை 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விஜிகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார் விரைந்து வந்து மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபரின் உடலை பார்வையிட்டனர். அவரது தலை மற்றும் உடலில் ரத்த காயங்கள் இருந்தன. இதனால் அவரை மர்மநபர்கள் அடித்துக் கொலை செய்து விட்டு, உடலை ஏரியில் வீசி சென்று இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

தீவிர விசாரணை

இதனை தொடர்ந்து அந்த வாலிபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், காணாமல் போன ஸ்டூடியோ உரிமையாளர் மணிகண்டன் என்பது தெரியவந்தது. பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த கொலை வழக்கில் துப்பு துலக்குவதற்காக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மணிகண்டனை கொலை செய்த மர்மநபர்கள் யார்?, எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதோடு, அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் உளுந்தூர்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story