போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட17 வயது சிறுவன் இறந்த வழக்கின் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும்; மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட17 வயது சிறுவன் இறந்த வழக்கின் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும்; மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 11 Dec 2020 3:06 AM IST (Updated: 11 Dec 2020 3:06 AM IST)
t-max-icont-min-icon

விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுவன் இறந்த வழக்கில் குற்றப் பத்திரிகை நகலை தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

17 வயது சிறுவன் சாவில் மர்மம்

மதுரை பெத்தானியாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயா. இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

என்னுடைய 17 வயது மகனை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ம் தேதி போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். ஓரிரு நாட்கள் ஆகியும் அவர் வீடு திரும்பாததால் போலீஸ் நிலையத்தில் விசாரித்தேன். அப்போது அவரது மகனை கோர்ட்டில் ஒப்படைக்க போலீசார் கொண்டு சென்றனர். அங்கு எனது மகன் உடலில் பல்வேறு காயங்களுடன் இருந்ததை பார்த்தேன். பின்னர் சிகிச்சைக்காக அவர் சிறுவனை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். இதுகுறித்து மதுரை மாவட்ட முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தகவல் தெரிவித்தேன். அவர்கள் எனது மகனின் உடலில் இருந்த காயங்களையும் பதிவு செய்து கொண்டனர்.

இந்த நிலையில் எனது மகனின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தோம். அங்கு சிகிச்சை பலனின்றி எனது மகன் இறந்து விட்டார். 

எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று தாக்கியதில் தான் என் மகன் படுகாயமடைந்து இறந்து விட்டார். அவனது சிறுநீரகங்கள் மற்றும் உள் உறுப்புகளில் கடுமையான காயங்கள் இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். எனது மகனின் உடலை போலீசார் எங்களை வற்புறுத்தி புதைக்க செய்தனர். எனவே எனது மகன் இறப்புக்கு போலீசார் தான் காரணம். இதற்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுத்து, இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

ஐ.பி.எஸ். அதிகாரி விசாரணை
இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது மனுதாரரின் மகன் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு மாற்றியும், ஐ.பி.எஸ். அதிகாரி விசாரணை நடத்தி கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யும்படியும் மதுரை ஐகோர்ட்டு கடந்த ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டது.

கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரர் மகன் இறந்த வழக்கு தொடர்பான விசாரணை முடிவடைந்து விட்டது. குற்றப்பத்திரிகை விரைவில் கீழ் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார். அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் ஆர்.கருணாநிதி, மனுதாரர் மகன் இறப்பு வழக்கில் இதுவரை எந்த ஒரு போலீஸ்காரரும் கைது செய்யப்படவில்லை. எந்தெந்த சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொலை வழக்கு பதிவு செய்து உள்ளார்களா என்பது பற்றி எந்த தகவலும் இல்லை என்று தெரிவித்திருந்தார்.

குற்றப்பத்திரிகை நகல் வழங்க உத்தரவு
இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் ஆஜராகி, மனுதாரர் மகன் இறப்பு வழக்கில் குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. இதில் சம்பந்தப்பட்ட போலீசார் மற்றும் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட மனுதாரர் வக்கீல் ஆர்.கருணாநிதி, அப்படி என்றால் குற்றப்பத்திரிகை நகல் எங்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. உடனடியாக குற்றப்பத்திரிகை நகல் வழங்க வேண்டும். மேலும் மனுதாரர் மகன் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டு கடுமையான தாக்குதலுக்கு உட்பட்டு இறந்துள்ளார். ஆனால் அவருடைய குடும்பத்தினருக்கு இதுவரை எந்த ஒரு இழப்பீடும் மற்ற சலுகைகளும் வழங்கப்படவில்லை என்று வாதாடினார்.

விசாரணை முடிவில் மனுதாரர் மகன் இழப்பு வழக்கின் குற்றப்பத்திரிகை நகலை வருகிற 14-ம் தேதி இந்த கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசு தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

Next Story