மதுரையில் கிரைண்டர் கல்லை தலையில் போட்டு மனைவியை கொன்ற கடைக்காரர்; போலீசில் சரண்


சரண் அடைந்த வேலாயுதம்
x
சரண் அடைந்த வேலாயுதம்
தினத்தந்தி 13 Dec 2020 3:17 AM IST (Updated: 13 Dec 2020 3:17 AM IST)
t-max-icont-min-icon

கிரைண்டர் கல்லை தலையில் போட்டு மனைவியை கொன்ற கடைக்காரர் போலீசில் சரண் அடைந்தார்.

மனைவியுடன் தகராறு
மதுரை பெத்தானியாபுரம் நாகுநகரை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 50). இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இவருடைய மனைவி அஞ்சனாதேவி (44). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

மூத்த மகளுக்கு திருமணமாகிவிட்டது. 2-வது மகள் எம்.காம். படித்துவிட்டு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். மகன் கல்லூரியில் படித்து வருகிறார்.

சில மாதங்களாக வேலாயுதத்துக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் மதியம் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அஞ்சனாதேவி கணவரை மரியாதை குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் வேலாயுதம் ஆத்திரத்தில் இருந்தார். இரவில் அனைவரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.

கொலை
அப்போது திடீரென்று எழுந்த வேலாயுதம், தன் மனைவி மீது இருந்த ஆத்திரத்தில் கிரைண்டர் கல்லை எடுத்து மனைவி தலையில் போட்டார். அதில் படுகாயம் அடைந்த அஞ்சனாதேவி ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே வீட்டில் இருந்த மகனும், மகளும் சத்தம் கேட்டு எழுந்து வந்தனர். அவர்கள் தாயார் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதற்கிடையில் மனைவியை கொலை செய்த வேலாயுதம் கரிமேடு போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அங்கு நடந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் தெரிவித்து சரண் அடைந்தார். அதை தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று அஞ்சனாதேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கணவர் கைது
பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலாயுதத்தை கைது செய்து விசாரித்தனர். அவர் போலீசாரிடம் கூறும் போது, “கடந்த 5 ஆண்டுகளாக எனது மனைவியின் போக்கில் மாற்றம் ஏற்பட்டு, என்னை அவர் சரியாக கவனிக்கவில்லை. அவமரியாதையாக நடத்தினார். உறவினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் என்னை உதாசீனப்படுத்தினார். இதனால் மனவருத்தத்தில் இருந்து வந்தேன். மேலும் வீட்டில் பிள்ளைகள் பெரியவர்களாகி விட்டதால் அவர்கள் முன்னால் அவளுடன் சண்டை போடக்கூடாது என்று அமைதியாக இருந்தேன். இரண்டு பேரும் தனியாகத்தான் வெளி இடங்களுக்கு சென்று வந்தோம்.

சம்பவத்தன்று மதியம் அவளிடம் பேசும்போது தகராறு ஏற்பட்டது. அப்போது என்னை மீண்டும் தரக்குறைவாக பேசினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் மனைவியை கொலை செய்ய முடிவு செய்தேன். நள்ளிரவு நேரம் அனைவரும் தூங்கிய பிறகு அவரது தலையில் கிரைண்டர் கல்லை தூக்கி போட்டு கொலை செய்தேன். வீட்டில் இருந்த எனது பிள்ளைகளுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. எனவே தான் நேராக இங்கு வந்து சரண் அடைந்துவிட்டேன்” என்றார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story