வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த பணி சிறப்பு முகாம்: ஒரே நாளில் 12 ஆயிரம் பேர் விண்ணப்பம்
வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தப்பணியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 12 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தப்பணியில் நேற்று முன்தினமும், நேற்றும் சிறப்பு முகாம் நடைபெற்றது. அந்தந்த வாக்குச்சாவடிகளில் இந்த சிறப்பு முகாம் நடந்தது. இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் மேற்கொள்ள உரிய விண்ணப்பப்படிவங்களை வாங்கி பூர்த்தி செய்து கொடுத்தனர். இதில் கடந்த நவம்பர் மாதம் 21, 22-ந் தேதிகளில் நடந்த சிறப்பு முகாம்களில் மாவட்டத்தில் 28 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த நிலையில் நேற்று முன்தினம் நடந்த சிறப்பு முகாமில் மாவட்டத்தில் ஒரே நாளில் 12 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மட்டும் 9 ஆயிரத்து 80 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். மேலும் பெயர்களை நீக்க ஆயிரத்து 464 பேர் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து கொடுத்தனர். நேற்று நடந்த சிறப்பு முகாமில் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து பெயர்களை சேர்க்க விண்ணப்பித்திருந்தனர். சிறப்பு முகாம் நேற்றோடு கடைசி என்பதால் அரசியல் கட்சியினரும் தங்கள் பகுதியில் வீடு, வீடாக இளம் வாக்காளர்களை கண்டறிந்து பட்டியலில் சேர்க்க அறிவுறுத்தி அழைத்து சென்றதை காணமுடிந்தது.
இறுதி வாக்காளர் பட்டியல்
இந்த சிறப்பு முகாம் முடிவடைந்த நிலையில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பின் வாக்காளர் பட்டியலில் புகைப்படத்துடன் சேர்க்கப்படும். அதன்பின் 2021-ம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் (ஜனவரி) மாதம் 20-ந் தேதி வெளியிடப்படும். விண்ணப்பங்கள் பெறப்பட்டதை கணினியில் பதிவேற்றும் பணியையும் தேர்தல் பிரிவு ஊழியர்கள் தொடங்கி உள்ளனர்.
கறம்பக்குடி
கறம்பக்குடி தாலுகாவில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம் 2-வது நாளாக நேற்று நடைபெற்றது. இதில் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் தங்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க கோரி ஆர்வமுடன் விண்ணப்பித்தனர். குறிப்பாக கல்லூரி மாணவிகள் தங்கள் தோழிகளுடன் வந்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தனர். இதேபோல் ஏற்கனவே பட்டியலில் இருந்த கல்லூரி மாணவர்கள் வரைவுவாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா? என சரிபார்த்து கொண்டனர். திருத்தம் செய்யவும் வாக்குச்சாவடி மையங்களுக்கு ஏராளமானோர் வந்திருந்தனர். இந்த சிறப்பு முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் கறம்பக்குடி தாசில்தார் சேக் அப்துல்லா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பொன்னமராவதி
பொன்னமராவதி தாலுகாவில் உள்ள செவலூர், கொப்பனாபட்டி, ஆலவயல், அம்மன்குறிச்சி, பொன்னமராவதி, வேந்தன்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளில் வாக்காளர் பெயர் பட்டியலில் பெயர் சேர்த்தல் முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் டெய்சிக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், பொன்னமராவதி வட்டாட்சியர் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
Related Tags :
Next Story