‘பொங்கல் பரிசை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி கொடுங்கள்’ தமிழக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்


‘பொங்கல் பரிசை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி கொடுங்கள்’ தமிழக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 22 Dec 2020 6:27 AM GMT (Updated: 22 Dec 2020 6:27 AM GMT)

‘பொங்கல் பரிசை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி கொடுங்கள்’ என்று தமிழக அரசை உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடலூர்,

விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி நேற்று கடலூர் மாவட்டத்தில் தனது 2-ம் கட்ட பிரசார பயணத்தை தொடங்கினார்.

இதில் கடலூர் டவுன்ஹால் பகுதியில் இருந்து தனது பிரசார பயணத்தை தொடங்கினார். அப்போது, உதயநிதி ஸ்டாலின் திறந்த வேனில் நின்று பேசியதாவது:-

வெள்ளை அறிக்கை வேண்டும்

விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற முதல் கட்ட பயணத்தை திருவாரூரில் தொடங்கி முடித்தேன். அப்போது மக்கள் எழுச்சியுடன் இருப்பதை பார்க்க முடிந்தது. தற்போது 2-ம் கட்ட சுற்றுப்பயணத்தை கடலூரில் தொடங்கி உள்ளேன். கடலூர் இயற்கை பேரிடர் பாதிக்கும் மாவட்டம்.

அதிலிருந்து மீண்டு வந்துள்ளீர்கள். புயலினால் பாதித்த போது, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து பார்வையிட்டு மக்களுக்கு உதவி செய்தார். இங்கு 9 ஆண்டுகளாக அமைச்சராக இருக்கும் எம்.சி.சம்பத் சட்ட மன்ற அலுவலகம் கூட வந்ததில்லை.ஜெயலலிதா இருந்தபோது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினார்கள். அப்போது எவ்வளவு முதலீட்டை கொண்டு வந்தீர்கள் என்று வெள்ளை அறிக்கையை கேட்டும் இதுவரை தரவில்லை. தற்போது 2-வது உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தினார்கள். அதிலும் ஒரு ரூபாய் கூட முதலீட்டை ஈர்க்கவில்லை.

முதல்-அமைச்சர் வேட்பாளர்

வருகிற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 200 சட்டமன்ற தொகுதிக்கு மேலாக வெற்றி பெற வேண்டும். அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணியாக இருப்பதால் அவர்களை தோற்கடிப்பது எளிதாகும். அவர்களுக்கு மரண அடி கொடுக்க வேண்டும். அ.தி.மு.க. முதல்-அமைச்சர் வேட்பாளரை பா.ஜனதா அறிவிக்கும் நிலையில் உள்ளது. அ.தி.மு.க. என்பது அமித்‌ஷா தி.மு.க., அடிமை தி.மு.க. என்று உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அவர் கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் சுனாமியால் உயிரிழந்தவர்களின் நினைவாக வைக்கப்பட்டிருந்த நினைவு கல்வெட்டுக்கு மலர் வளையம் வைத்தும், கடலில் பால் ஊற்றியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து மீனவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தினார். அதன்பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பேசினால் கைது நடவடிக்கை

நான் எனது முதற்கட்ட பிரசார பயணத்தை தொடங்கிய போது, பேசினாலே, என்னை கைது செய்து கொண்டு இருந்தார்கள். பொதுக்கூட்டங்களில் பேசவிடவில்லை. கைது நடவடிக்கையின் மூலமாக என்னை பேச விடாமல் தடுத்தார்கள். 3-வது நாளுக்கு பின்னர் ஹால் மீட்டிங் நடத்துமாறு போலீசார் தெரிவித்தனர்.

மேலும், தி.மு.க. மற்றும் எங்களது கூட்டணி கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்தக்கூடாது என்று தடை போட்டு இருந்தனர். ஆனால் தி.மு.க. பிரசாரத்துக்கு எழுச்சி இருப்பது அறிந்து தற்போது தளர்வுகளை அறிவித்து தனியாக பிரசாரத்துக்கு சென்று கொண்டு உள்ளார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இது எனக்கு வசதியாக உள்ளது. என்னுடைய பணிகள், பிரசாரம் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது.

மக்கள் பதிலடி கொடுப்பார்கள்

பிரசாரத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதல் யார் சென்றாலும் மக்கள் அவர்களிடம் கேள்விகள் கேட்க தயாராக உள்ளனர். ஏனெனில் கடந்த 9½ ஆண்டுகால ஆட்சியில் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு, பழிவாங்கப்பட்டுள்ளனர். கொரோனா உள்பட அனைத்திலும் ஊழல் செய்த இந்த ஆட்சிக்கு மக்கள் பதிலடி கொடுக்க தயாராக உள்ளனர்.

உதாரணமாக, இங்குள்ள மீனவ கிராம மக்களுக்கு சுனாமியின் போது 650 வீடுகளை கலைஞர் கருணாநிதி கட்டி கொடுத்தார். அதை சரியான முறையில் பராமரிக்க வில்லை. மேலும் வீடுகள் ஒதுக்கி கொடுக்க தற்போதுள்ள ஆட்சியாளர்கள் ரூ.30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை கமி‌‌ஷன் கேட்கிறார்கள் என்று மீனவர்கள் தரப்பில் என்னிடம் புகார் தெரிவித்தனர்.

இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து அவர் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

ரூ.5 ஆயிரமாக வழங்க வேண்டும்

கேள்வி: தமிழக அரசு பொங்கல் பரிசாக ரூ.2500 அறிவித்துள்ளது. இது தி.மு.க.வை அச்சமடைய செய்து இருப்பதாக அ.தி.மு.க. அமைச்சர் கூறியுள்ளாரே?

பதில்: இதை கொடுக்க சொன்னதே நாங்கள் தான். கொரோனா காலத்தில் இருந்தே ரே‌‌ஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து வந்தார். ஆனால், அப்போது நிதி இல்லை என்று சொல்லி விட்டு, தேர்தல் நெருங்குவதால் 2500 ரூபாய் கொடுப்பதாக அறிவித்துள்ளனர். கொடுங்கள், இதை நாங்கள் சொன்னது போன்று 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி கொடுக்க வேண்டும் என்பதை தான் இப்போதும் தெரிவிக்கிறோம்.

கேள்வி: நேரடியாக ரஜினிகாந்தை பார்த்து ஸ்டாலின் பயப்படுகிறார் என்று கு‌‌ஷ்பு தெரிவித்துள்ளார். அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?.

பதில்: நாங்கள் எதற்காக அவரை கண்டு பயப்பட வேண்டும். அவர் இன்னும் கட்சியே தொடங்கவில்லை. அத்துடன், ரஜினிகாந்த் கருணாநிதியின் மிக நெருங்கிய நண்பர், தலைவருடன் நட்பு பாராட்டக்கூடியவர் ஆவார். அப்படி இருக்கும் போது நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்.

90 சதவீத எழுச்சி

கேள்வி: வருகிற சட்டமன்ற தேர்தல் எப்படி இருக்கும்?

பதில்: நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் என்ன முடிவு எடுத்தார்களோ அதே முடிவை எடுப்பார்கள் என்று நம்புகிறேன். தேர்தல் தேதி மற்றும் எங்களது வேட்பாளர் யாரும் அறிவிக்காத சூழ்நிலையில் 90 சதவீதம் எழுச்சி மக்களிடம் உள்ளது.

கேள்வி: ஆளும் அ.தி.மு.க. எதிர்கட்சிகளை பிரசாரத்துக்கு அனுமதி அளிக்காமல் முடக்குகிறதா?

பதில்: சென்ற முறை என்னை பிரசாரம் செய்ய விடவில்லை. கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். ஆனால் தற்போது முதல்-அமைச்சர் பிரசாரத்துக்கு வந்துள்ளதால், என்னை கைது செய்தால் விமர்சனங்கள் எழும். ஆகையால் தான் எனக்கு அதுபோன்ற பிரச்சினை இல்லை. எனது பிரசார பயணத்தை தொடர்ந்து நடத்துகிறேன்.

கேள்வி: எதிர்கட்சியினர் எம்.ஜி.ஆர். ஆட்சியையும், உங்களது கூட்டணி கட்சியில் உள்ளவர்கள் காமராஜர் ஆட்சியையும் கொண்டு வருவோம் என்கிறார்கள். ஏன் கலைஞரின் ஆட்சியை கொண்டு வருவோம் என தெரிவிக்கவில்லை?

பதில்: ஏனென்றால் கலைஞர் ஆட்சியில் நிறைய வேலை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக வண்ணாரப்பாளையத்தில் சில்வர் பீச் ரோட்டில் உள்ள டீக்கடையில் உதயநிதி ஸ்டாலின் டீ குடித்தார். தொடர்ந்து அவர் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வழியாக திறந்த வேனில் நின்றபடி அங்கு திரண்டு நின்ற மக்களிடம் ஆதரவு திரட்டினார்.

மருத்துவக்கல்லூரி

அதைத்தொடர்ந்து கடலூர் எம். புதூரில் தி.மு.க. ஆட்சி காலத்தின் போது மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்ட பகுதியை உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார். அங்கு நிருபர்களிடம் கூறுகையில், தி.மு.க. ஆட்சியின் போது 2011-ம் ஆண்டு பிப்ரவரி 13-ந்தேதி இந்த பகுதியில் மருத்துவக்கல்லூரி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

பின்னர் 9½ ஆண்டுகளாக இங்கு எந்த பணியையும் மேற்கொள்ளவில்லை. மீண்டும் தி.மு.க. ஆட்சி அமையும் போது, மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக இருந்து இங்கு மருத்துவக்கல்லூரியை திறந்து வைப்பார். குறிப்பிட்ட நேரத்தில் கல்லூரி வந்திருந்தால் மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்திருக்கும்.

மக்களுக்கு தேவையான திட்டங்களை ஆட்சியில் இருப்பவர்கள் செயல்படுத்தவில்லை. கமி‌‌ஷன் எடுப்பதற்கான திட்டங்களை தான் செய்கிறார்கள். மதுரையில் எய்ம்ஸ் கல்லூரி அடிக்கல் நாட்டுகிறோம் என்றார்கள். 1½ ஆண்டுகள் ஆகியும் இன்னும் எந்த பணியும் அங்கு தொடங்கவில்லை.

மு.க.ஸ்டாலின் நேற்று (நேற்று முன்தினம்) அ.தி.மு.க.வை நிராகரிப்போம் என்கிற ஒரு இணையதள பக்கத்தை உருவாக்கி, அதில் பதிவு செய்யுமாறு வலியுறுத்தி இருந்தார். இதில் 24 மணி நேரத்தில் ஒரு லட்சம் பேருக்கு மேற்பட்டவர்கள் பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் மக்கள் இந்த ஆட்சியின் மீது எவ்வளவு வெறுப்போடு உள்ளனர் என்பதற்கு இது எடுத்துக்காட்டாகும் என்றார்.

வரவேற்பு

முன்னதாக கடலூர் வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு கடலூரில் கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., டி.ஆர்.வி. ரமே‌‌ஷ் எம்.பி., துரை.கி.சரவணன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் இள.புகழேந்தி, அய்யப்பன், நகர செயலாளர் ராஜா, தி.மு.க. பிரமுகரும், வி.ஆர். அறக்கட்டளை நிறுவனருமான விஜயசுந்தரம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு வரவேற்றனர். பிரசார பயணத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story