பெரம்பலூர் மாவட்டத்தில் பா.ம.க.வினர் மனு கொடுக்கும் போராட்டம்


பெரம்பலூர் மாவட்டத்தில் பா.ம.க.வினர் மனு கொடுக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 30 Dec 2020 11:11 PM GMT (Updated: 30 Dec 2020 11:11 PM GMT)

20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பா.ம.க.வினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெரம்பலூர்,

தமிழகத்தில் வன்னிய சமூகத்தினருக்கு கல்வி-வேலைவாய்ப்பில் 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பா.ம.க.வினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று பா.ம.க.வினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு திரண்டு வந்து மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநில துணைத் தலைவர் அனுக்கூர் ராஜேந்திரன் தலைமையில், அக்கட்சியினர் மற்றும் வன்னிய சமூகத்தினர் பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானாவில் இருந்து ஊர்வலமாக பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள், 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவினை அலுவலகத்தில் இருந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மரியதாசிடம் வழங்கி, அதனை கலெக்டர் மூலம் தமிழக முதல்-அமைச்சருக்கு அனுப்பி வைக்குமாறு ேகட்டுக்கொண்டனர்.

இதேபோல் பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் பஸ் நிலையத்தில் இருந்து பா.ம.க.வினர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு அவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் செந்திலிடம் மனு அளித்தனர். இதில் ஒன்றிய கவுன்சிலர் சுப்ரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வேப்பந்தட்டை பஸ் நிறுத்தத்தில் இருந்து பா.ம.க.வினர் மாநில துணைத் தலைவர் செந்தில்குமார் தலைமையில் கோஷங்களை எழுப்பியவாறு, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வந்து வட்டார வளர்ச்சி அதிகாரிகள் இமயவரம்பன், இளங்கோவன் ஆகியோரிடம் மனு கொடுத்தனர். இதில் பா.ம.க.வினர் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story