அரசு எந்த திட்டம் கொண்டு வந்தாலும் மு.க.ஸ்டாலின் எதிர்க்கிறார்; பெருந்துறை பிரசாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு


தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியபோது
x
தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியபோது
தினத்தந்தி 8 Jan 2021 6:36 AM GMT (Updated: 8 Jan 2021 6:36 AM GMT)

அரசு எந்த திட்டம் கொண்டு வந்தாலும் மு.க.ஸ்டாலின் எதிர்க்கிறார் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருந்துறை பிரசாரத்தில் பேசினார்.

அத்திக்கடவு-அவினாசி
ஈரோடு மாவட்டத்தில் 2 நாள் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பெருந்துறையில் நேற்று இரவு பிரசாரத்தை முடித்தார். முன்னதாக பெருந்துறை பஸ் நிலையம் அருகே நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மினி கிளினிக்குகள்
நகரம் மற்றும் கிராமப்புறங்களில் ஒரே நேரத்தில் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் திறந்த ஒரே அரசு எனது அரசு. இப்படி எத்தனை திட்டங்கள் கொண்டு வந்தாலும், திட்டங்கள் அனைத்தையும் ஸ்டாலின் எதிர்க்கிறார்.

அரசின் எல்லா திட்டங்களையும் சிந்தாமல் சிதறாமல் மக்களுக்கு வழங்கி வருகிறோம். ஜெயலலிதா 3 லட்சம் உழைக்கும் மகளிருக்கு அம்மா ஸ்கூட்டர் வழங்கப்படும் என்று அறிவித்தார். அம்மா மறைந்தாலும் அந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி இதுவரை 2 லட்சத்து 84 ஆயிரம் பேருக்கு மானிய ஸ்கூட்டர் வழங்கப்பட்டு உள்ளது. இன்னும் 16 ஆயிரம் பேருக்கு மட்டுமே வழங்க வேண்டும்.

கொரோனா காலத்தில் ரூ.1, 000 வழங்கியதை தொடர்ந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.2 ஆயிரத்து 500 வழங்கி வருகிறோம். இதனையும் தடுக்க தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அதை முறியடித்து ஏழை மக்களுக்கு இந்த தொகையை கொடுத்து வருகிறோம். மக்களுக்கு உதவித்தொகை கொடுப்பதை தடுக்கும் தலைவராக ஸ்டாலின் உள்ளார்.

ஊழல் வழக்குகள்
அவர் பொய் அறிக்கைகள் வெளியிட்டு உள்ளார். இப்போது ஒரு சவால் விட்டு இருக்கிறார். எடப்பாடி பழனிசாமி யார் தயவில் ஆட்சிக்கு வந்தார் என்று கேட்டு உள்ளார். உங்கள் அப்பா யார் தயவில் ஆட்சிக்கு வந்தார். மக்கள் அறிஞர் அண்ணா ஆட்சிக்கு வரவேண்டும் என்றுதான் வாக்களித்தனர். ஆட்சியில் இருந்தபோதே அவர் இறந்தார். அவரது இறப்புக்கு காரணம் யார்? அவரது இறப்புக்கு பின்னர் நாவலர்தான் முதல்-அமைச்சராக வரவேண்டும். ஆனால் கருணாநிதி தில்லு முல்லு செய்து, சதித்திட்டம் தீட்டி ஆட்சிக்கு வந்தார். எனவே என்னை பற்றி பேச ஸ்டாலினுக்கு அருகதை கிடையாது.

என் மீதும், அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டு கூறி இருக்கிறார். உண்மையிலேயே முன்னாள் தி.மு.க. அமைச்சர்கள் 13 பேர் மீது ஊழல் வழக்குகள் உள்ளன. அந்த வழக்குகளை விரைந்து முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அதை மறைக்கும் வகையில் அமைச்சர்கள் மீதும், என் மீதும் பொய்யான புகார்களை தெரிவிக்கிறார்கள்.

மீண்டும் சவால்
தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகள் விரைவில் விசாரிக்கப்பட்டால், அவர்கள் எங்கே செல்வார்கள் என்பது தெரியும். எங்கள் அமைச்சர்கள் களி சாப்பிடுவார்கள் என்று ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் அவருடைய அமைச்சர்கள் தான் களி சாப்பிடுவார்கள். அவருடைய மகன் உதயநிதி பதவிக்கு வர மூத்த அமைச்சர்கள் இடையூறாக இருப்பார்களோ என்று ஸ்டாலினே வழக்கை விரைந்து முடிக்கும் வகையிலும், அப்புறப்படுத்தும் வகையிலும் ஊழல் பேச்சை தற்போது கையில் எடுத்து இருக்கிறார் என்று நினைக்கிறேன். ஊழல் பிரச்சினை தொடர்பாக விவாதம் செய்யலாம் என்று நான் அழைத்தேன். அதற்கு அவர் உச்சநீதிமன்றத்தில் இருக்கும் வழக்குகளை முடித்துவிட்டு வாருங்கள் பேசலாம் என்கிறார். அந்த வழக்குகளை போட்டதே தி.மு.க. தான். ஊழல் தடுப்பு கண்காணிப்பு 
துறை இந்த வழக்கு தொடர்பாக விசாரித்து அறிக்கையை மூடி முத்திரையிட்டு வழங்க வேண்டும் என்று கூறி இருந்தது. அதன்படி ஊழல் தடுப்பு கண்காணிப்புத்துறை கொடுத்த உரையை பிரிக்காமலேயே சி.பி.ஐ. விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பாக நாங்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தோம்.

அதை 3 நீதிபதிகள் விசாரித்து எங்கள் மீதான வழக்கை விசாரிக்க அது உகந்ததல்ல என்று தடை விதித்தனர். சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியை விட மு.க.ஸ்டாலின் அறிவாளியா? நீதிபதியே உகந்ததல்ல என்று சொன்ன வழக்கு தொடர்பாக பேசுவதாக இருந்தால் நீ வா... பேசு. எந்த துறை குறித்தும் நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டுக்கு நாங்கள் பதில் தருகிறோம்.

தேர்தல் அறிக்கை
தி.மு.க. ஆட்சியில் செய்யப்பட்ட ஊழல்களின் பட்டியல் வெளிவருகிறது. புதிய தலைமை செயலகம் கட்டுவதற்கு ரூ.200 கோடி டெண்டர் விடப்பட்டு உள்ளது. ஆனால் ரூ.430 கோடி கொடுத்து இருக்கின்றனர். இந்த ஊழல் தொடர்பான வழக்குக்கு தடை ஆணை பெற்றுள்ளனர். தடையை நீக்கிவிட்டு வந்தால், அதை பற்றியும் விசாரிப்போம். தி.மு.க. ஆட்சியில் சாலை பணியாளர் நிதி 
ஒதுக்கியதில் 72 சதவீதம் கூடுதல் நிதியும், மற்றொரு வழக்கில் 68 சதவீதம் கூடுதல் நிதியும் வழங்கப்பட்டு உள்ளது. எனவே ஊழல் செய்பவர்கள் தி.மு.க.வினர்தான்.

நான் நேர்மையான வழியில் ஆட்சி செய்து வருகிறோம். இந்த மண் ராசியான மண். சொல்லப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. எனவே மீண்டும் ஆட்சி தொடர அ.தி.மு.க. வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள். புத்தாண்டு வாழ்த்துகள். பொங்கல் வாழ்த்துகள்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

இதேபோல், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறச்சலூர் ஓடாநிலையில் பேசியபோது 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட ஒரே சின்னம் இரட்டை இலை என்று கூறினார்.

தோரணங்கள்
முன்னதாக பெருந்துறையில் நடந்த விழாவில் தோப்பு என்.டி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. வரவேற்று பேசினார். மேலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வெள்ளி வீரவேலை பரிசாக வழங்கினார்.

இந்த விழாவில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, கே.சி.கருப்பணன், எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, வி.பி.சிவசுப்பிரமணி, எஸ்.ஈஸ்வரன், அ.தி.மு.க. மாநில வர்த்தக அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.பழனிசாமி, பொன்னுசாமி, ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் விஜயன், அவைத்தலைவர் சந்திரசேகர், வேளாண் கூட்டுறவு விற்பனை சங்க துணைத்தலைவர் ஜெகதீஷ், மாவட்ட ஊராட்சிக்குழு கவுன்சிலர் பாலகிருஷ்ணன், அருள்ஜோதி, பெருந்துறை ஒன்றியக்குழு தலைவர் சாந்தி ஜெயராஜ், துணைத்தலைவர் உமாமகேஸ்வரன், மாவட்ட ஊராட்சி முன்னாள் துணைத்தலைவர் மணிமேகலை, அ.தி.மு.க. நிர்வாகிகள் பழனிசாமி, பெரியசாமி, துரைசாமி, கையிலங்கிரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story