அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது


அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 16 Jan 2021 11:02 PM GMT (Updated: 16 Jan 2021 11:02 PM GMT)

அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

அரியலூர், 

அரியலூர்- பெரம்பலூர் மாவட்டங்களில் முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி போடுதவற்கான ஒத்திகை நிகழ்ச்சி தலா 5 இடங்களில் கடந்த 8-ந்தேதி நடந்தது. இதைத்தொடர்ந்து நேற்று அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இதில் அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் அரசு தலைமை மருத்துவமனை, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை, குமிழியம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கடுகூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 4 இடங்களில் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் மட்டும் மருத்துவம் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

முன்னதாக கொரோனா தடுப்பூசி போடுவதற்காக தேர்வு செய்யப்பட்டவர்களின் உடல்நிலை பரிசோதனை செய்யப்பட்டு, அனைவரும் தனிமனித இடைவெளியுடன் காத்திருப்பு அறையில் அமர வைக்கப்பட்டனர். மேலும், தடுப்பூசி போட வந்தவர்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்ட இணையதளத்தில் உள்ள விவரங்களுடன் சரிபார்க்கப்பட்டது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு உடனடியாக அந்த விவரம், அவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்பட்டது. தடுப்பூசி போட்ட பிறகு ஏதேனும் பாதிப்பு வருகிறதா? என்று கண்டறிய, அவர்கள் தனியாக 30 நிமிடங்கள் அமர வைக்கப்பட்டனர்.

அரியலூரில் 3,082 பேருக்கு...

அரியலூர் மாவட்டம் கடுகூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதாரப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா, ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம் ஆகியோர் முன்னிலையில் தொடங்கப்பட்டது. அப்போது அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் கூறுகையில், அரியலூர் மாவட்டத்தில் 2,046 அரசு பணியாளர்கள், 1,036 தனியார் பணியாளர்கள் என மொத்தம் 3,082 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கொரோனா தடுப்பூசி போடும் பணியினை அனைவரும் சிறப்பாக மேற்கொண்டு கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும், என்றார். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், வருவாய் அதிகாரி ஜெய்னுலாப்தீன், துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) ஹேமசந்த்காந்தி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ெஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை கலெக்டர், ெஜயங்கொண்டம் எம்.எல்.ஏ. ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் புதிதாக கட்டப்பட்டு வரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பெரம்பலூரில் 2,550 பேருக்கு...

இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் முதற்கட்டமாக மருத்துவம் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, பெரம்பலூர் எம்.எல்.ஏ. இளம்பை இரா.தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் தொடங்கப்பட்டது. அப்போது கலெக்டர் கூறுகையில், பெரம்பலூர் மாவட்டத்திற்கு முதற்கட்டமாக 5,100 தடுப்பூசிகள் வரப்பெற்றுள்ளன. அந்த தடுப்பூசிகள் 2,550 பேருக்கு 2-ம் கட்டமாக போடப்படுகிறது, என்றார்.

இதில் துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) டாக்டர் கீதாராணி, மருத்துவமனையின் கண்காணிப்பாளர் தர்மலிங்கம், அரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story