மணிமுக்தா ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை
தியாகதுருகம் அருகே மணிமுக்தா ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனா்.
கண்டாச்சிமங்கலம்,
தியாகதுருகம் அருகே பானையங்கால் கிராமத்தில்இருந்து சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் மணிமுக்தாறு உள்ளது. இந்த ஆற்றின் குறுக்கே சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டது. ஆனால் பாலம் கட்டி முடிக்கப்பட்ட ஒரே ஆண்டில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாலம் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு சென்று வரும் பக்தர்களும், பானையங்கால் கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளும் தங்களது விவசாய நிலங்களுக்கும் இந்த ஆற்றை கடந்துதான் செல்ல வேண்டிய நிலை இருந்ததால் அவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். ஆற்றில் நீர்வரத்து குறைந்த பிறகு தற்காலிகமாக சாலைகள் அமைத்து அதன் வழியாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் கடந்த மாதம் பெய்த வடகிழக்கு பருவ மழையால் மணிமுக்தா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட தற்காலிக சாலை தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் தற்காலிக சாலையை பயன்படுத்தி வந்த வாகன ஓட்டிகள், விவசாயிகள் மாற்றுப்பாதை வழியாக சுற்றி சென்று வர வேண்டிய நிலை உள்ளது.
இருப்பினும் பானையங்கால் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலங்களில் அறுவடை செய்யும் விளை பொருட்களை தலையில் சுமந்தபடியும், கால் நடைகளையும் ஆற்று நீரில் நீந்தியபடியே கொண்டு செல்வதை பார்க்க முடிகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து தற்காலிக சாலை அமைத்து தருவதோடு நிரந்தர தீர்வுகாண ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Related Tags :
Next Story