திருவான்மியூரில் பரபரப்பு சம்பவம் ஆட்டோவை கடத்தி, வழிப்பறி கொள்ளை 3 பேர் கைது


திருவான்மியூரில் பரபரப்பு சம்பவம் ஆட்டோவை கடத்தி, வழிப்பறி கொள்ளை 3 பேர் கைது
x
தினத்தந்தி 1 Feb 2021 2:42 AM GMT (Updated: 2021-02-01T08:12:01+05:30)

சென்னை திருவான்மியூர் பகுதியில் ஆட்டோவை கடத்தி வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை, 

சென்னை செம்மஞ்சேரியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 40). இவர் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர் திருவான்மியூர் பகுதியில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது 3 பேர் செல்வத்தின் ஆட்டோவை மடக்கி சவாரிக்கு அழைத்தனர். அவர்கள் 3 பேரையும் செல்வம் தனது ஆட்டோவில் அழைத்து சென்றார்.

சிறிது தூரம் சென்றதும் அவர்கள் 3 பேரும் சேர்ந்து கத்தியை காட்டி மிரட்டி செல்வம் வைத்திருந்த பணத்தை கொள்ளையடித்தனர். பின்னர் செல்வத்தை கீழே தள்ளி விட்டு ஆட்டோவை கடத்தி சென்று விட்டனர்.

இது தொடர்பாக செல்வம் திருவான்மியூர் போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் அன்புக்கரசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

3 பேர் கைது

ஆட்டோ கடத்திச்செல்லப்பட்ட பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதை வைத்து ஆட்டோவை கடத்திய குற்றவாளிகள் 3 பேரை போலீசார் கண்டுபிடித்தனர். அவர்கள் 3 பேரும் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களது பெயர் சத்யா (32), சேட்டு (33), டேவிட் (25) என்பதாகும். 3 பேரும் பெசன்ட் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். அவர்களிடம் இருந்து ஆட்டோ மீட்கப்பட்டது. 3 கத்திகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story