காரைக்குடி அருகே குளத்தில் மூழ்கி பலியான தொழிலாளியின் உடல் மீட்பு


காரைக்குடி அருகே குளத்தில் மூழ்கி பலியான தொழிலாளியின் உடல் மீட்பு
x
தினத்தந்தி 2 Feb 2021 8:43 PM GMT (Updated: 2021-02-03T02:17:57+05:30)

காரைக்குடி அருகே குளத்தில் மூழ்கி பலியான தொழிலாளியின் உடலை தீயணைப்புத்துறையினர் 2-வது நாளாக நேற்று தேடினார்கள். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு அவரது உடலை மீட்டனர்.

காரைக்குடி,

காரைக்குடி அருகே புதுவயல் தண்ணீர்ப்பந்தல் வீதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 47). இவர் கொட்டகை போடும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் கண்ணனும் அவரது மனைவி லட்சுமியும் மேலத்தெருவில் உள்ள குளத்திற்கு குளிக்க சென்றனர். மனைவி லட்சுமி கரையில் அமர்ந்திருக்க கண்ணன் குளத்திற்குள் இறங்கி குளித்தார். அவர் நீச்சல் அடித்து குளத்தின் அக்கரைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து மனைவி அமர்ந்து இருக்கும் குளக்கரைைய நோக்கி வந்தார்.

அப்போது ஆழமான பகுதிக்கு சென்று விட்டதாக தெரிகிறது. இதில் தத்தளித்த அவர் தன்னை காப்பாற்றுமாறு சைகை செய்து நீரில் மூழ்கினார். அவரை காப்பாற்ற மனைவி முயற்சித்தும் பலனில்லை. அவர் நீரில் மூழ்கி விட்டார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் காரைக்குடி தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து நேற்று முன்தினம் மாலை 5 மணியிலிருந்து இரவு 7.30 மணி வரை குளத்தில் இறங்கி தேடி பார்த்தனர். கண்ணன் உடலை மீட்க முடியவில்லை. குளத்தின் அருகே இரவு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. கண்ணனின் மனைவியும், உறவினர்களும், நண்பர்களும் அங்கேயே சோகத்துடன் அமர்ந்திருந்தனர். 

இந்த நிலையில் நேற்று மீண்டும் காலை 7 மணி அளவில் தீயணைப்புத்துறையினர் தேடுதல் பணியை தொடங்கினார்கள். காலை 9.15 மணி அளவில் இறந்த நிலையில் கண்ணனின் உடலை மீட்டனர். தனது கணவரின் உடலை பார்த்ததும் அவரது மனைவி கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

இதுகுறித்து சாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story