தலைவாசல் அருகே ஏரியில் இருந்து மண்ணை திருடி மணல் தயாரித்து விற்ற 10 பேர் கைது


தலைவாசல் அருகே ஏரியில் இருந்து மண்ணை திருடி மணல் தயாரித்து விற்ற 10 பேர் கைது
x
தினத்தந்தி 3 Feb 2021 9:56 PM GMT (Updated: 3 Feb 2021 9:56 PM GMT)

தலைவாசல் அருகே ஏரியில் இருந்து மண்ணை திருடி, அதனை வீடு கட்ட மணலாக தயாரித்து விற்ற 10 பேர் கைது செய்யப்பட்டனர் மேலும் பொக்லைன் எந்திரம், 60 டன் மணல் பறிமுதல் செய்யப்பட்டது.

தலைவாசல், 

தலைவாசல் அருகே மணிவிழுந்தான் தெற்கு புதூர் கிராமத்தில் அரசு அனுமதியின்றி ஏரியில் இருந்து மண்ணை திருடி ஜெனரேட்டர் உதவியுடன் வீடு கட்டுவதற்கு மணல் தயாரித்து பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக  தலைவாசல் போலீஸ் நிலையத்தில் மணிவிழுந்தான் தெற்கு கிராம நிர்வாக அலுவலர் மாரியப்பன் புகார் கொடுத்தார்.

அதன் பேரில் ஆத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு இம்மானுவேல் ஞானசேகர் மற்றும் ஆத்தூர் தாசில்தார் அன்புசெழியன் ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று மணல் தயாரித்து விற்பனை செய்த இடத்தில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது அந்த பகுதியில் உள்ள ஏரியில் இருந்து மண்ணை திருடி வந்து, அதனை எந்திரங்கள் மூலம் மணலாக சுத்திகரித்து, அதனை லாரிகள் மூலம் கட்டிடங்கள், வீடுகள் கட்ட விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அனுமதியின்றி மணல் தயாரிக்க பயன்படுத்திய எந்திரங்கள், பொக்லைன் எந்திரம் மற்றும் 60 டன் மணல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல்பாண்டியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிவிழுந்தான் தெற்கு புதூரை சேர்ந்த நில உரிமையாளர் தமிழரசன் (வயது 39), மணலை தயாரித்த சதீஷ்குமார் (40), பிரபு (30), சம்பேரி பிரபாகரன் (30), கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியை சேர்ந்த பொக்லைன் ஆபரேட்டர் வெண்மணி (23), அருண்குமார் (21), கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் குதிரைமவுலி கிராமத்தைச் சேர்ந்த ரத்தீஷ் (36), கொல்லங்கோடு கிராமத்தை சேர்ந்த மணி (43), கொடும்பு ஒலச்சேரியை சேர்ந்த அன்சாத் (29), கோவிந்தபுரத்தை சேர்ந்த ஷாஜகான் (34) ஆகிய 10 பேரை கைது செய்தனர்.

Next Story