சேலத்தில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ரூ.57 லட்சம் வெள்ளி பொருட்கள் பறிமுதல்
சேலத்தில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ரூ.57 லட்சம் மதிப்புள்ள வெள்ளி பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சூரமங்கலம்,
சேலத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு ரெயில்கள் மூலம் வெள்ளி பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க மாநகர போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் சேலத்தில் இருந்து ரெயில் மூலம் ஆந்திராவுக்கு வெள்ளி பொருட்கள் கடத்தப்படுவதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது.
அதன்பேரில் சேலம் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் அரவிந்தன் தலைமையில் போலீசார் சந்திரமோகன், அபிலேஷ் ஆகியோர் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலைய பிளாட்பாரங்களி்ல் சோதனை நடத்தினர்.
அப்போது 5-வது பிளாட்பாரத்தில் ஒரு இடத்தில் 10-க்கும் மேற்பட்ட மூட்டைகள் இருப்பது தெரிந்தது. இதையடுத்து அந்த மூட்டைகளை பிரி்த்து பார்த்த போது அதில் வெள்ளிக்கொலுசு, அரைஞாண் கொடி உள்பட வெள்ளி பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.
அபராதம் விதித்தனர்
இதையடுத்து அந்த மூட்டைகளின் அருகில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் சேலம் செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்த வெள்ளி வியாபாரி செந்தில்குமார் (வயது 49) என்பது தெரிந்தது. அவரிடம் மேலும் விசாரித்த போது அவர் சேலத்தில் இருந்து ஆந்திராவுக்கு வெள்ளி பொருட்கள் எடுத்துச்செல்வதாக தெரிவித்தார். ஆனால் அவரிடம் அதற்கான எந்த வித ஆவணங்களும் இல்லை.
இதைத்தொடர்ந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ரூ.57 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 80 கிலோ வெள்ளி பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றை மாநில வரித்துறை அதிகாரி ரவிக்குமாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து 80 கிலோ வெள்ளி பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி மற்றும் அபராத தொகை ரூ.3 லட்சத்து 45 ஆயிரத்து 600, வெள்ளி வியாபாரி செந்தில்குமாருக்கு விதிக்கப்பட்டது.
இது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘வெள்ளி பொருட்கள் ஆந்திராவுக்கு கொண்டு செல்வதற்கான எந்த ஆவணங்களும் அவரிடம் இல்லை. அதனால் பறிமுதல் செய்து உள்ளோம். அதற்கான உரிய ஆவணங்கள் ஒப்படைத்தால் பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளி பொருட்களை செந்தில்குமாரிடம் ஒப்படைத்து விடுவோம். ஆவணங்கள் கொடுக்கவில்லை என்றால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறினர்.
Related Tags :
Next Story