நாமக்கல்லில் கல்லூரி நுழைவுவாயில் முன்பு மாணவிக்கு தாலிகட்ட முயன்ற வாலிபரால் பரபரப்பு


நாமக்கல்லில் கல்லூரி நுழைவுவாயில் முன்பு மாணவிக்கு தாலிகட்ட முயன்ற வாலிபரால் பரபரப்பு
x
தினத்தந்தி 14 Feb 2021 12:48 AM IST (Updated: 14 Feb 2021 12:48 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் கல்லூரி நுழைவுவாயில் முன்பு மாணவிக்கு தாலிகட்ட முயன்ற வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல்,

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள மின்னத்தாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவருடைய மகன் பாலகிருஷ்ணன் (வயது 29). இவர் கோவையில் கேட்டரிங் பணி செய்து வருகிறார். இவருக்கும் நாமக்கல் அருகே உள்ள ஏளூர்பட்டியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவிக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவீட்டார் இணைந்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்து உள்ளனர். பின்னர் சில காரணங்களால் திருமணம் நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல் நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கலைக்கல்லூரிக்கு அந்த மாணவி புறப்பட்டார் வந்தார். அப்போது கல்லூரி நுழைவுவாயில் முன்பு பாலகிருஷ்ணன், மாணவிக்கு தாலிகட்ட முயற்சி செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த மாணவி கூச்சல் போட்டார்.

அவருடன் வந்த சக மாணவிகளும் கூச்சல் போட்டதால் அக்கம்பக்கத்தில் இருந்து வந்த நபர்கள் அந்த வாலிபரை பிடித்து நாமக்கல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு சென்ற போலீசார் வாலிபரை நாமக்கல் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் பாலகிருஷ்ணன், அந்த மாணவியை மறக்க முடியாமல், ஒரு தலையாக காதலித்து கடந்த சில நாட்களாக பின் தொடர்ந்ததாகவும், தாலியை கட்டினாலாவது தன்னை ஏற்று கொள்வார் என்ற நம்பிக்கையில் தாலிக்கட்ட முயற்சி செய்ததாகவும் தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப்பகலில் கல்லூரி நுழைவுவாயில் முன்பு மாணவிக்கு வாலிபர் தாலிகட்ட முயற்சி செய்த சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story