தடையை மீறி விற்பனை சென்னையில் 570 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல்


தடையை மீறி விற்பனை சென்னையில் 570 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 1 March 2021 3:44 AM GMT (Updated: 1 March 2021 3:44 AM GMT)

தடையை மீறி விற்பனை சென்னையில் 570 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் டீ கடை உரிமையாளர்கள் உள்பட 6 பேர் கைது.

சென்னை, 

சென்னை சேத்துப்பட்டு அப்பாராவ் தோட்டம் டோபிகானா பகுதியில் உள்ள ஒரு டீ கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக சேத்துப்பட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த கடையில் சோதனை நடத்தினர்.

இதில், விற்பனைக்கு தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பான்மசாலா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து டீ கடை உரிமையாளர்களான சகோதரர்கள் ராமலிங்கம் (வயது 50), சுப்பிரமணி (48) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சென்னை கொடுங்கையூர் முத்தமிழ்நகர் 3-வது பிளாக்கை சேர்ந்த ஜோசப் (38), கிருஷ்ணமூர்த்தி நகர் லிங்கேசன் தெருவை சேர்ந்த பொன்ராஜ் (39), எழில்நகரை சேர்ந்த மாரியப்பன் (38), வியாசர்பாடி கருணாநிதி சாலையை சேர்ந்த மாரிமுத்து (45) ஆகிய 4 பேர் ஆட்டோ மூலம் சேத்துப்பட்டு பகுதியில் உள்ள கடைகளுக்கு குட்கா புகையிலை பொருட்களை சப்ளை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 570 கிலோ எடை கொண்ட குட்கா புகையிலை பொருட்களும், ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைதான 6 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story