சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு பயணிகளுக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை சான்றிதழ் கட்டாயம்
சென்னை விமான நிலையத்தில் நேற்று முதல் உள்நாட்டு விமான பயணிகளுக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமான பயணிகளுக்கு மட்டுமே கொரோனா மருத்துவ பரிசோதனை செய்து ‘கொரோனா தொற்று இல்லை’ என்ற சான்றிதழ் கட்டாயம் கொண்டு வரப்படவேண்டும் என்ற நிலை இருந்து வருகிறது.
ஆனால் சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் விமான பயணிகளுக்கு கொரோனா மருத்துவ சான்றிதழ் கட்டாயம் என்ற நடைமுறை இதுவரை கிடையாது.
உள்நாட்டு பயணிகளுக்கும்...
ஆனால் நேற்று முதல் சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமான பயணிகளுக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கு 72 மணி நேரத்துக்கு முன்பு இந்திய மருத்துவ கவுன்சில் ஆராய்ச்சி மையம் அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில் கொரோனா பரிசோதனை செய்து, ‘தொற்று இல்லை’ என சான்றிதழ் உள்ள பயணிகள் மட்டுமே விமானங்களில் பயணிக்க முடியும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறிப்பாக சென்னையில் இருந்து அந்தமான், ஒடிசாவில் புவனேஸ்வா், ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூா், மணிப்பூரில் உள்ள இம்பால், மேற்கு வங்கத்தில் உள்ள பேக்டோக்ரா, குஜராத்தில் உள்ள ராஜ்கோட் ஆகிய உள்நாட்டு விமான நிலையங்களுக்கு செல்பவா்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் கடட்மாயமாக்கப்பட்டு உள்ளது.
திருப்பி அனுப்பப்படுவர்
கொரோனா தொற்று இல்லை என சான்றிதழ் கொடுத்தால்தான் விமான நிலைய கவுண்ட்டா்களிலேயே பயணிக்கு ‘போா்டிங் பாஸ்’ வழங்கப்படும். சான்றிதழ் இல்லாமல் வருபவர்களின் பயணம் ரத்துசெய்யப்பட்டு திருப்பி அனுப்பப்படுவாா்கள்.
பின்னர் அந்த பயணிகள் கொரோனா மருத்துவ பரிசோதனை செய்து சான்றிதழுடன் வந்து மீண்டும் விமான பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தனி விமானங்களில் இந்த நகரங்களுக்கு செல்லும் பயணிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story