கொரோனா நோயாளிகளுக்கு உடனடி சிகிச்சை அளிக்க அறிவுரை தனியார் ஆஸ்பத்திரிகள் விரைந்து செயல்பட்டு இறப்பு விகிதத்தை குறைக்க வேண்டும்


கொரோனா நோயாளிகளுக்கு உடனடி சிகிச்சை அளிக்க அறிவுரை தனியார் ஆஸ்பத்திரிகள் விரைந்து செயல்பட்டு இறப்பு விகிதத்தை குறைக்க வேண்டும்
x
தினத்தந்தி 27 April 2021 11:26 AM IST (Updated: 27 April 2021 11:26 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகள் கொரோனா நோயாளிகளுக்கு உடனடி சிகிச்சை அளித்து இறப்பு விகிதத்தை குறைக்க உதவ வேண்டும் என மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் காஞ்சீபுரம் இந்திய மருத்துவ கழகம், தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் தனியார் பரிசோதனை மையங்களில் கொரோனா நோய் தொற்று கண்டறியும் பட்சத்தில் விரைந்து நடவடிக்கை எடுப்பது குறித்து மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் பேசும்போது, தனியார் பரிசோதனை மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றும், தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பு மற்றும் மருத்துவ உபகரணங்கள் தேவைக்கு ஏற்ப இருப்பு தயாராக வைத்துக் கொள்ளுமாறும் தெரிவித்தார்.

தனியார் பல்நோக்கு சிகிச்சை மருத்துவமனைகளில் சிறப்பு கொரோனா பிரிவு தொடங்கி கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொண்டார்.

தகவல் தெரிவிக்க வேண்டும்

சிறு மருத்துவமனைகளில் கொரோனா நோய்த்தொற்று அறியும் பட்சத்தில் அருகில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்ட அவர், ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை முடிவில் நோய் தொற்று அறியாத பட்சத்தில் சி.டி.ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்ய வேண்டும். அதில், நோய் தொற்று அறியும் பட்சத்தில் உடனடியாக மாவட்ட சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

அதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகள் விரைந்து செயல்பட்டு கொரோனா நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சை அளித்து இறப்பு விகிதத்தை குறைக்க உதவ வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா. பன்னீர்செல்வம், மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் ஜீவா, துணை இயக்குநர் பழனி, தனியார் மருத்துவமனை பிரிதிநிதிகள், மருத்துவ அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story