கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை அதிகாரி எச்சரிக்கை
கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை அதிகாரி எச்சரிக்கை.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கோல்டி பிரேமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நடப்பு சொர்ணவாரி பருவத்தில் 8 ஆயிரத்து 500 ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான முன்பணிகளான உழவுநாற்றங்கால் பராமரித்தல் மற்றும் நாற்று நடுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்த பருவத்திற்காக 5 ஆயிரத்து 916 டன் உரங்கள் தனியார் மற்றும் தொடக்க கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பில் உள்ளது. எனவே உரத்தட்டுப்பாடு நிலவ வாய்ப்பே இல்லை.
ஒவ்வொரு உரமும், உர மூட்டையில் அச்சிடப்பட்டுள்ள அதிகபட்ச விலையில் விற்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் உரம் வாங்கும்போது ஆதார் எண்ணை பயன்படுத்துவதுடன் அதற்குரிய ரசீதும் பெற்று கொள்ள வேண்டும்.
அதே போல உரம் வாங்கும் போது உரமூட்டைகளில் அச்சிடப்பட்டுள்ள அதிகபட்ச விலையும் சரியாக உள்ளதா என்று கவனித்து வாங்க வேண்டும். கூடுதல் விலைக்கு உரம் விற்றாலோ அல்லது உர இருப்பு மற்றும் விலைப்பட்டியல் விவரங்களை உரக்கடைகள் தெரிவிக்காமல் இருந்தாலோ தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story