மாங்காடு அருகே தம்பியின் கழுத்தை நெரித்துக்கொன்ற அண்ணன்கள்; உடந்தையாக இருந்த தாயும் கைது


மாங்காடு அருகே தம்பியின் கழுத்தை நெரித்துக்கொன்ற அண்ணன்கள்; உடந்தையாக இருந்த தாயும் கைது
x
தினத்தந்தி 29 April 2021 4:21 AM GMT (Updated: 29 April 2021 4:21 AM GMT)

மாங்காடு அருகே தம்பியின் கழுத்தை நெரித்துக்கொலை செய்த அண்ணன்கள் கைது செய்யப்பட்டார். இதற்கு உடந்தையாக இருந்த தாயும் கைதானார்.

தகராறு

காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த வடக்கு மலையம்பாக்கம், சோழன் நகர் பகுதியை சேர்ந்தவர் கோவில்ராஜ் (வயது 25). மது குடிக்கும் பழக்கமுடையவர். மது குடித்து விட்டு வீட்டுக்கு வரும் இவர் தாய், சகோதரர்கள், அண்ணிகளிடம் தகராறு செய்து வந்தார். 2 நாட்களுக்கு முன்னர் இரவு வழக்கம் போல் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்த கோவில்ராஜ் வீட்டில் உள்ளவர்களிடம் தகராறு செயதார். பின்னர் வீட்டின் வெளியே சென்று படுத்து கொண்டார்.

நேற்று முன்தினம் காலை எழுந்து பார்த்தபோது கோவில்ராஜ் இறந்து கிடப்பதாக அவரது சகோதரர்கள் தெரிவித்தனர். இதையடுத்து உறவினர்கள் முன்னிலையில் கோவில்ராஜ் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

கொலை

அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக நண்பர் அளித்த தகவலின் பேரில் மாங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையில் வந்த போலீசார் அவரது தாய் சாராள் (50), சகோதரர்கள் மதன்ராஜ் (25), மைக்கேல்ராஜ் (27) ஆகியோரிடம் விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்கள். பின்னர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். குடிபோதையில் வீட்டுக்கு வந்து தகராறு செய்தததால் ஆத்திரம் தாங்க முடியாமல் வீட்டுக்கு வெளியே படுத்திருந்த கோவில்ராஜை சரமாரியாக தாக்கி கழுத்தை நெரித்துக்கொலை விட்டு பின்னர் அவர் குடிபோதையில் இறந்து விட்டதாக நாடகமாடியதாக தெரிவித்தனர்.

கைது

இதையடுத்து கொலைக்கு உடந்தையாக இருந்ததாக அவரது தாய் சாராள், சகோதரர்கள் என 3 பேரை மாங்காடு போலீசார் கைது செய்தனர். மேலும் கோவில்ராஜ் உடலை நீதிபதி மற்றும் ஆர்.டி.ஓ. முன்னிலையில் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து கோவில்ராஜ் புதைக்கப்பட்ட சுடுகாட்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story