காஞ்சீபுரத்தில் கொரோனா விதிமுறைகளை மீறிய 3 கடைகளுக்கு சீல்
காஞ்சீபுரத்தில் கொரோனா விதிமுறைகளை மீறிய 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
அபராதம்
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 3 ஆயிரம் சதுர அடி கொண்ட மக்கள் அதிகம் வரும் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. காஞ்சீபுரம் பெரு நகராட்சிக்குட்பட்ட காந்தி சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் செயல்படும் பட்டு சேலை விற்பனை கடைகளும், பல்பொருள் அங்காடிகள், வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் என 50-க்கும் மேற்பட்ட கடைகளும் வணிக நிறுவனங்களும் காஞ்சீபுரம் நகர் பகுதியில் மூடப்பட்டது.
இந்த நிலையில் நேற்று பட்டுசேலை எடுக்கவும் துணி மணிகள் வாங்கவும் ஏராளமான பொதுமக்கள் காஞ்சீபுரம் பகுதிக்கு வந்திருந்த நிலையில் மூடப்பட்டிருந்த பட்டு சேலை கடைகள், துணிக்கடைகள் உள்ளிட்டவை முன்பக்கம் மூடிய நிலையில் பின் கதவை திறந்து வைத்து பொதுமக்களை அனுமதித்து வியாபாரம் செய்து வந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த பெருநகராட்சி நிர்வாகத்தினர் காந்தி சாலை, காமராஜர் சாலை, வள்ளல் பச்சையப்பர் தெரு பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பின்பக்க கதவை திறந்து வைத்திருந்த கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் அபராதம் விதித்தனர்.
3 கடைகளுக்கு சீல்மேலும் பின்பக்க கதவை திறந்து வைத்து கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை விதிமுறைகளை மீறி பொதுமக்களை அதிக அளவில் அனுமதித்து வியாபாரம் செய்த பிரபல துணிக்கடை உள்ளிட்ட 3 கடைகளுக்கு பெருநகராட்சி ஆணையர் மகேஷ்வரி முன்னிலையில் அபராதம் விதித்து சீல் வைத்தனர். நகராட்சி அதிகாரிகளின் திடீர் ஆய்வின் காரணமாக காஞ்சீபுரம் காந்தி சாலை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் காந்தி சாலையில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு தலா ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று ஒரே நாளில் பல்வேறு கடைகளுக்கு ரூ.70 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.