கள்ளச்சந்தையில் கொரோனா மருந்து விற்பனை: சென்னையில் மேலும் ஒரு டாக்டர் உள்பட 6 பேர் கைது
சென்னையில் கள்ளச்சந்தையில் கொரோனா மருந்து விற்பனை செய்ததாக மேலும் ஒரு டாக்டர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
கொரோனா மருந்து
கொரோனா பாதிப்பால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ‘ரெம்டெசிவிர்’ என்ற மருந்து வழங்கப்படுகிறது. இதனால் வெளிமார்க்கெட்டுகளில் இந்த மருந்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனை சமாளிக்க தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் அந்த மருந்தை கொள்முதல் செய்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பணியாளராக வேலை செய்து வந்த விக்னேஷ் (வயது 26) என்பவர் இந்த மருந்தை கள்ளச்சந்தையில் வாங்கி, தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள், மருந்து கடைகளுக்கு விற்பனை செய்து வந்தார்.
அவரிடம் இருந்து சென்னையை அடுத்த மடிப்பாக்கம் பகுதியில் கிளினிக் நடத்தி வரும் டாக்டர் முகமது இம்ரான்(26) என்பவர் 4 ஆயிரத்து 800 ரூபாய் மருந்தை ரூ.8,500-க்கு வாங்கி கள்ளச்சந்தையில் ரூ.20 ஆயிரத்துக்கு விற்பனை செய்வதற்காக தனது நண்பர் விஜய்(27) என்பவருடன் திருவண்ணாமலையில் இருந்து நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு காரில் வந்துகொண்டிருந்தார்.
மேலும் 2 பேர் கைதுஇதுபற்றி தகவல் அறிந்த குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார், தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் அவர்களது காரை மடக்கி டாக்டர் முகமது இம்ரான் மற்றும் விஜய் ஆகியோரை கைது செய்து தாம்பரம் போலீசில் ஒப்படைத்தனர்.
இந்தநிலையில் இவர்களிடமிருந்து அந்த மருந்தை வாங்கி விற்பனை செய்ய முயற்சித்த ராஜ்குமார் மற்றும் திருவண்ணாமலையை சேர்ந்த விக்னேஷ் ஆகிய மேலும் 2 பேரை நேற்று தாம்பரம் போலீசார் கைது செய்தனர். பின்னர் கைதான 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பல்லாவரம்அதேபோல் பல்லாவரம் பகுதியிலும் ‘ரெம்டெசிவிர்’ மருந்தை கள்ளச்சந்தையில் விற்றதாக பெருமாள்(26) என்பவரையும், அவரிடம் இருந்து அந்த மருந்தை வாங்கியதாக கன்னியாகுமரியை சேர்ந்த டாக்டர் ஜான்கிங்ஸ்லி(49) என்பவரையும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் நேற்று கைது செய்து பல்லாவரம் போலீசில் ஒப்படைத்தனர்.
ஐ.சி.எப். பகுதியில்...இதேபோல் சென்னை ஐ.சி.எப். பகுதியில் ‘ரெம்டெசிவிர்’ மருந்தை தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருவதாக திருவல்லிக்கேணி மருந்து கட்டுப்பாட்டு துறை இன்ஸ்பெக்டர் முரளி கிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்து அவர், ஐ.சி.எப். போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் ஸ்டான்லி ஆஸ்பத்திரி நுண்ணறிவு பிரிவு போலீஸ் சுரேஷ் என்பவர் மூலம் அந்தநபரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு ‘ரெம்டெசிவிர்’ மருந்து உடனடியாக தேவைப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.
நேற்று மதியம் மருந்துடன் ஐ.சி.எப். வடக்கு காலனி கமல விநாயகர் கோவில் அருகே காத்திருந்த அந்த நபரிடம் ரூ.30 ஆயிரத்தை கொடுத்து மருந்தை வாங்கிய போலீசார், அவரை மடக்கிப்பிடித்து விசாரித்தனர்.
கூட்டாளியுடன் சிக்கினார்விசாரணையில் அவர், வில்லிவாக்கம் திருவீதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கார்த்திகேயன் (33) என்பதும், 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு சென்னை தங்கசாலை தெருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பார்மசி உதவியாளராக பணியாற்றி வருவதும் தெரிந்தது.
இவர், கொரோனா இருப்பதுபோல் போலியான மருத்துவ சீட்டை தயாரித்து கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் ‘ரெம்டெசிவிர்’ மருந்தை வாங்கி, 1500 ரூபாய் மருந்தை கள்ளச்சந்தையில் ரூ.15 ஆயிரம் வரை விற்றதும் தெரிந்தது.
இது தொடர்பாக கார்த்திகேயன், அவரது கூட்டாளி ஜாபர் ஆகிய 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 8 ‘ரெம்டெசிவிர்’ மருந்துகளை பறிமுதல் செய்தனர்.