கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிக்க வேண்டும்; கவர்னர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தல்
கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிக்க வேண்டும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மேலாண்மை கூட்டம்
புதுவை மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பு மேலாண்மை கூட்டம் நேற்று கவர்னர் மாளிகையில் நடந்தது. கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் தலைமைச்செயலர் அஸ்வனிகுமார், கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ஆனந்தமோகன், நிதித்துறை செயலர் அசோக்குமார், உள்ளாட்சிதுறை செயலர் வல்லவன், சுகாதாரத்துறை செயலர் அருண், கவர்னரின் செயலர் அபிஜித் விஜய் சவுத்ரி, ஜிப்மர் மருத்துவமனை இயக்குனர் ராகேஷ் அகர்வால் ஆகியோர் கலந்து கொண்டனர். சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார், புதுச்சேரியில் தற்போதைய கொரோனா நிலவரம் குறித்து படக்காட்சி மூலம் விளக்கினார்.
கட்டுப்பாடுகள் நீட்டிப்புஊரடங்கு கட்டுப்பாடுகளின் பயனாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக 1000-க்கும் கீழாக குறைந்துள்ளது. அதேபோல் கொரோனா பரிசோதனையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-
ஊரடங்கு கட்டுப்பாடுகளின் பயனாக கொரோனா தொற்று பரவல் குறைந்திருப்பது சற்று ஆறுதலை தருகிறது. கொரோனா நோயாளிகளின் ஆக்சிஜன் அளவை மணிக்கு ஒருமுறை சோதனை செய்யும் பிராணவாயு செவிலியர் திட்டம், காரைக்காலில் தொடங்கப்பட்டுள்ள பல்ஸ் ஆக்சிமீட்டா வங்கி போன்ற புதுமையான திட்டங்கள் மூலம் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும்.
உயிர்காற்று திட்டத்துக்கு பலரும் பங்களிப்பு செய்து வருகின்றனர். இதை பயன்படுத்தி அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். கிராமப்புறங்களில் வீடு, வீடாக சென்று தடுப்பூசி போடும் பணியை வேகப்படுத்த வேண்டும். கொரோனா தொற்று இல்லாத கிராமங்களை உருவாக்க துண்டுபிரசுரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த பணிகளில் சுய உதவிக்குழுக்களை ஈடுபடுத்த வேண்டும். சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு விருதுகள், பணக்கொடை வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.