கொரோனா பாதிப்பால் சென்னை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் சாவு
சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலத்தில் கொரோனா பாதிப்பால் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் பரிதாபமாக இறந்தார்.
சென்னை மாநகராட்சி ஆலந்தூர் 12-வது மண்டலத்தில் உள்ள 159-வது வட்டம் மீனம்பாக்கம் பகுதி சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் ஈஸ்வரன் (வயது 51). மடிப்பாக்கத்தில் வசித்து வந்த இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடும்பத்துடன் செங்கல்பட்டுக்கு குடிபெயர்ந்தார். கடந்த 2001-ம் ஆண்டு மாநகராட்சி சுகாதார ஆய்வாளராக பணியில் சேர்ந்தார். திருவொற்றியூர், சைதாப்பேட்டை, பெருங்குடி ஆகிய மாநகராட்சி மண்டலங்களில் பணிபுரிந்த இவர், கடந்த 1½ ஆண்டுகளாக ஆலந்தூர் மண்டலத்தில் பணியாற்றி வந்தார்.இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி ஈஸ்வரனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதற்காக கிண்டியில் உள்ள கொரோனா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இவர் பல்வேறு உடல் உபாதைகள் காரணமாக கொரோனா தடுப்பூசி போட்டுக்ெகாள்ளவில்லை என கூறப்படுகிறது. பலியான ஈஸ்வரனுக்கு செந்திலாவதி என்ற மனைவியும், பிரகதீஸ்வரன், ஹரிகிருஷ்ணன் என 2 மகன்களும் உள்ளனர். இவரது மனைவி செந்திலாவதியும் கொரோனா பாதிப்பு காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Related Tags :
Next Story