கொரோனா முழுமையாக ஒழியவில்லை: சென்னையில் 140 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் மாநகராட்சி தகவல்


கொரோனா முழுமையாக ஒழியவில்லை: சென்னையில் 140 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் மாநகராட்சி தகவல்
x
தினத்தந்தி 6 July 2021 3:16 AM GMT (Updated: 6 July 2021 3:16 AM GMT)

சென்னையில் கொரோனா முழுமையாக ஒழியவில்லை. தற்போது சென்னையில் 140 இடங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளது என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னையில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது ஆயிரத்துக்கும் மேற்பட்ட தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக இருந்தது. இந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை சென்னை மாநகராட்சி 3 வகையாக பிரித்தது.

அதாவது, ஒரு தெருவில் 3 முதல் 5 பேர் பாதிக்கப்பட்டிருந்தால், அந்த தெருவில் தடை செய்யப்பட்ட பகுதி என மாநகராட்சி சார்பில் ‘பேனர்’ வைக்கப்பட்டிருக்கும்.

6 முதல் 10 பேர் பாதிக்கப்பட்டிருந்தால், அந்த தெருவில் இருந்து யாரும் உள்ளே செல்லாத படியும், தெருவில் இருந்து யாரும் வெளியேறாத வகையிலும், தடுப்புகள் மூலம் அடைத்து, தடை செய்யப்பட்ட பகுதி என ‘பேனர்’ வைக்கப்பட்டிருக்கும். அதுவே 10 பேருக்கு மேல் ஒரு தெருவில் பாதிக்கப்பட்டிருந்தால், அந்த தெரு தடுப்புகள் வைத்து அடைக்கப்படுவது மட்டுமல்லாமல், போலீஸ் பாதுகாப்பும் போடப்படும்.

10 பேருக்கு மேல்...

அந்தவகையில் கடந்த மே, ஜூன் மாதங்களில் தொற்று பாதிப்பு உச்சத்தில் இருந்த போது, ஆயிரத்துக்கும் மேற்பட்ட தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக சென்னை மாநகரட்சி அறிவித்திருந்தது. தற்போது சென்னையில் தினசரி பாதிப்பு 200 என்ற எண்ணிக்கையில் குறைந்திருப்பதால், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும் வெகுவாக குறைந்துள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் ஒரு தெருவில் கூட 10 பேருக்கு மேல் யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்ற மகிழ்ச்சியான தகவலையும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ஆனாலும், 132 தெருக்களில் 3 முதல் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, திருவொற்றியூர், மாதவரம், அம்பத்தூர் மண்டலங்களில் தலா 7 தெருக்களும், மணலி, சோழிங்கநல்லூர் மண்டலத்தில் தலா 5 தெருக்களும், தண்டையார் பேட்டையில் 2 தெருக்களும்,

ராயபுரம் மண்டலத்தில் 3 தெருக்களும், திரு.வி.க.நகர் மண்டலத்தில் 6 தெருக்களும், அண்ணாநகர், ஆலந்தூர் மண்டலங்களில் தலா 11 தெருக்களும், கோடம்பாக்கம், அடையாறு மண்டலங்களில் தலா 18 தெருக்களும், வளசரவாக்கம், பெருங்குடி மண்டலங்களில் தலா 4 தெருக்களிலும், 3 முதல் 5 பேர் பாதிக்கப்பட்டிருப்பதால் அவை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

140 தெருக்கள்

இதில், அதிகபட்சமாக தேனாம்பேட்டை மண்டலத்தில் மட்டும் 24 தெருக்களில் 3 முதல் 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், 6 முதல் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ள தெருக்கள் சென்னையில் 8 உள்ளன. அதன்படி தேனாம்பேட்டையில் 4 தெருக்களிலும், ராயபுரம், அம்பத்தூர், கோடம்பாக்கம், ஆலந்தூர் மண்டலங்களில் தலா ஒரு தெருவில், 6 முதல் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதால், அந்த தெருக்களும் தடுப்புகள் மூலம் அடைத்து, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

அந்தவகையில் தற்போது சென்னையில் மட்டும் 140 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இன்னும் சில நாட்களில் இந்த எண்ணிக்கையும் வெகுவாக குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story