காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விதை சான்று இயக்குனர் ஆய்வு


காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விதை சான்று இயக்குனர் ஆய்வு
x
தினத்தந்தி 20 Sept 2021 3:42 PM IST (Updated: 20 Sept 2021 3:42 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள விதைபண்ணைகள், விதை சுத்திகரிப்பு நிலையம், விதை பரிசோதனை நிலையம், வேளாண்மை விரிவாக்க மைய கிடங்குகள் மற்றும் அரசு தோட்டக்கலை பண்ணையில் கோவை விதை சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குனர் சுப்பையா ஆய்வு மேற்கொண்டார்.

காஞ்சீபுரம் மாவட்டம், முசரவாக்கம் மாநில எண்ணெய் வித்து பண்ணையில் நிலக்கடலை பயிரில் அமைக்கப்பட்டிருந்த வல்லுநர் விதை பண்ணை, கதிரி லெப்பாக்சி ஆதார நிலை விதைப்பண்ணை மற்றும் பச்சை பயிறு விதை குவியல் போன்றவற்றில் ஆய்வு மேற்கொண்டு அறிவுரை வழங்கினார். மேலும் பஞ்சு பேட்டையில் உள்ள மாநில அரசு விதை பண்ணையில் நெல் பயிரில் அமைக்கப்பட்டிருந்த ஆதார நிலை விதைப்பண்ணையை ஆய்வு செய்தார். விதை சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு பணிகளையும், நெல் சிப்பம் எடை மற்றும் ஈரப்பத தன்மையையும் ஆய்வு செய்தார். விதை பரிசோதனை நிலையத்தில் விதை பகுப்பாய்வு பணிகள், ஈரப்பதம், பிற ரக கலப்பு கண்டறிதல் மற்றும் விதை மாதிரிகள் வைக்கப்பட்டுள்ள விதை காப்பு அறையையும் ஆய்வு செய்து அறிவுரை வழங்கினார். வாலாஜாபாத் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் விதைகள் இருப்பு வைக்கப்பட்டிருந்த விவரம், முளைப்பு திறன் பதிவேடு, எடை சரிபார்ப்பு, விதைகளில் பூச்சித்தாக்குதல் வராமல் பராமரித்தல் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் திம்மாவரத்தில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணையில் பூசணியில் அமைக்கப்பட்டிருந்த ஆதார நிலை விதை பண்ணையில் ஆய்வு மேற்கொண்டார். மதுராந்தகம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு விவரம், முளைப்புத் திறன் பதிவேடு, மூட்டை சரிபார்ப்பு போன்றவற்றை ஆய்வு செய்து அறிவுரை வழங்கினார். மேலும் பாரத் வேளாண் கல்லூரியில் கிராம வேளாண்மை பணி அனுபவ திட்டத்தில் பயிற்சி மாணவிகளுக்கு விதைச்சான்று துறையின் செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். இந்த ஆய்வின் போது காஞ்சீபுரம் விதைச்சான்று உதவி இயக்குனர் காளியம்மாள், காஞ்சீபுரம் விதை பரிசோதனை அலுவலர் ராஜகிரி, விதை சான்று அலுவலர் மற்றும் விதை ஆய்வாளர்கள் உடன் இருந்தனர்.

Next Story