வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் துப்புரவு பணியாளர் கைது + "||" + Bank ATM Cleaner arrested for attempting to break into machine
வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் துப்புரவு பணியாளர் கைது
சென்னை சேத்துப்பட்டில் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் மாநகராட்சி துப்புரவு பணியாளர் கைது செய்யப்பட்டார்.
சென்னை,
சென்னை சேத்துப்பட்டு, 16-வது அவெனியூவில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம்.மையம் உள்ளது.
அங்கு நேற்று முன்தினம் அதிகாலை புகுந்த மர்ம நபர் ஒருவர், ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்துக்கொண்டிருந்தார்.
உடனே தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள ஸ்டேட் வங்கியின் தலைமை அலுவலகத்தில் அலாரம் அடித்தது.
அதை தொடர்ந்து, இது பற்றி சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தப்பிய ஓடிய மர்ம ஆசாமி
போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து, சேத்துப்பட்டு போலீசாருக்கு தகவல் பறந்தது.
அதன்படி அலாரம் அடித்த சில நிமிடங்களில் போலீசார் குறிப்பிட்ட ஏ.டி.எம். மையத்துக்கு விரைந்தனர்.
ஆனால் போலீசாரை பார்த்ததும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கொள்ளை மர்ம ஆசாமி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
அதனை தொடர்ந்து ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு தப்பி ஓடிய கொள்ளையனை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் இறங்கினர்.
துப்புரவு பணியாளர் கைது
இதில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது அன்னை சத்யா நகரைச்சேர்ந்த ரஞ்சித்குமார் (வயது 35) என்பதை கண்டுபிடித்த போலீசார் உடனடியாக அவரை கைது செய்தனர்.
அதை தொடர்ந்து அவர், தான் மாநகராட்சியில் ஒப்பந்த துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருவதாகவும், ரூ.5 லட்சம் கடனை அடைக்க, ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாகவும் போலீசாரிடம் வாக்கு மூலம் அளித்தார்.
ரஞ்சித்குமார் துப்புரவு பணி வாகனத்தில் வந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாகவும், அந்த வாகனத்தை அடையாளமாக வைத்தே அவரை கைது செய்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.