20 அடி ஆழ நடவாவி கிணறு மண்டபத்தில் எழுந்தருளிய காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள்

108 வைணவ தலங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் சித்ராபவுர்ணமியையொட்டி பாலாற்றங்கரையில் அருகிலுள்ள அய்யங்கார் குளம் கிராமத்திற்கு எழுந்தருளி பூமிக்கு அடியில் 20 அடி ஆழத்தில் உள்ள நடவாவி கிணற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பது வழக்கம்.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடவாவி கிணறு திருவிழா நடைபெறாமல் இருந்த நிலையில், தற்போது இயல்பு நிலை திரும்பி கட்டுப்பாடுகள் தளர்வடைந்ததை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான நடவாவி திருவிழா நடைபெற்றது. சித்ரா பவுர்ணமி நடவாவி கிணறு திருவிழாவையொட்டி காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள், கோவிலில் இருந்து வரதராஜபெருமாள் புறப்பட்டு ஓரிக்கை, செவிலிமேடு, புஞ்சை அரசந்தாங்கள், தூசி, கிராமங்கள் வழியாக அய்யங்கார் குளம் சஞ்சீவிராயர் கோவிலில் எழுந்தருளினார்.
சஞ்சீவிராயர் கோவிலில் வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்து, பச்சை, அரக்குகரை, வெண்பட்டு உடுத்தி திருவாபரணங்கள், பஞ்ச வர்ண மலர் மாலைகள் அணிவித்து ஊர்வலமாக கொண்டு வந்து பூமிக்கு அடியில் உள்ள நடவாவி கிணற்றில் இறக்கி மண்டபத்தில் வைத்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர் நடவாவி கிணற்றில் உள்ள 16 கால் மண்டபத்தில் மும்முறை வலம் வந்து, மேலேறி வந்த வரதராஜ பெருமாளை காஞ்சீபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இருந்து வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடி நின்று சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
மேலும் சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் பாலாற்றங்கரையில் நிலாச்சோறு சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
Related Tags :
Next Story






