பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.1½ கோடி தங்கம் பறிமுதல்


பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.1½ கோடி தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 10 Sep 2023 6:45 PM GMT (Updated: 10 Sep 2023 6:46 PM GMT)

துபாயில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.1½ கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரு:

பெங்களூரு புறநகர் மாவட்டம் தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடந்த 9-ந் தேதி நள்ளிரவு வெளிநாடுகளில் இருந்து பெங்களூருவுக்கு வந்த விமானங்களில் வந்திறங்கிய பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள், போலீசார் சோதனை நடத்தினார்கள்.

அப்போது துபாயில் இருந்து வந்த விமானத்தில் வந்திறங்கிய 2 பயணியின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, 2 பேரையும் தனியாக அறைக்கு அழைத்து சென்று அவர்களையும், உடைமைகளையும் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர்களது உடைமைகளில் தங்க கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, 2 பயணி களையும் போலீசார் கைது செய்தார்கள். துபாயில் இருந்து பெங்களூருவுக்கு அந்த தங்க கட்டிகளை உடைமைகளுக்குள் மறைத்து வைத்து 2 பேரும் கடத்தி வந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 2 கிலோ 800 கிராம் எடை கொண்ட தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.1 கோடியே 58 லட்சம் என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைதான 2 பேர் மீதும் தேவனஹள்ளி விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கடத்தலுக்கு பின்னணியில் இருப்பவர்களை பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story