பீகாரில் மர்ம நபர்கள் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு; வாலிபர் பலி - 11 பேர் படுகாயம்


பீகாரில் மர்ம நபர்கள் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு; வாலிபர் பலி - 11 பேர் படுகாயம்
x

பீகாரில் மர்ம நபர்கள் அடுத்தடுத்து நடத்திய துப்பாக்கிச்சூட்டில் வாலிபர் பலியானார். மேலும் 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

பாட்னா,

பீகாரின் பெகுசராய் மாவட்டத்தின் மல்கிபூர் சதுக்கத்தில் நேற்று முன்தினம் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள், திடீரென அங்குள்ள கடைகளை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டனர்.

மக்கள் நெரிசல் மிகுந்த அந்த பகுதியில் திடீரென நடந்த இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த மக்கள் நாலாபக்கமும் சிதறி ஓடினர். மேலும் கடைக்காரர்களும் கடைகளை விட்டு வெளியே ஓடினர். பின்னர் அந்த நபர்கள் பரானி தெர்மல் சதுக்கம், தெக்ரா, பச்வரா, ராஜேந்திரா பாலம் உள்ளிட்ட பகுதிகளிலும் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அந்த பகுதிகளில் பெரும் பதற்றம் நிலவியது.

அடுத்தடுத்து அரங்கேறிய இந்த துப்பாக்கிச்சூட்டில் சந்தன் குமார் என்ற வாலிபர் குண்டுபாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார். 11 பேர் படுகாயமடைந்தனர். இதில் சிலர் பெகுசராயிலும், மற்றவர்கள் பாட்னாவிலும் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த பயங்கரத்தை நிகழ்த்திய மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை பிடிப்பதற்கு போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த சம்பவத்துக்கு காரணம் என்ன என்று தெரியவில்லை. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story