10 மணிநேரம்... திரும்ப, திரும்ப ஒரே கேள்வி; மனஉளைச்சல் உண்டாக்கினர்: சிசோடியா குற்றச்சாட்டு


10 மணிநேரம்... திரும்ப, திரும்ப ஒரே கேள்வி; மனஉளைச்சல் உண்டாக்கினர்:  சிசோடியா குற்றச்சாட்டு
x

9 முதல் 10 மணிநேரம் என்னை அமர வைத்து, ஒரே கேள்விகளை திரும்ப, திரும்ப கேட்டு மனஉளைச்சல் ஏற்படுத்தினர் என சிசோடியா கோர்ட்டில் குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.


புதுடெல்லி,


டெல்லி மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் மாநில முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியாவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. இதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணைக்கு அவர் நேரில் ஆஜரானார்.

அவரிடம் 8 மணி நேரத்திற்கு மேல் நடந்த விசாரணை முடிவில், சிசோடியாவை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். அவரை வரும் 4-ந்தேதி (இன்று) வரை சி.பி.ஐ. காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது. இதனால், சிசோடியா சி.பி.ஐ. காவலில் உள்ளார்.

அவரது காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் இருந்து சிசோடியாவை அதிகாரிகள் டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்த இன்று அழைத்து சென்றனர். இதனை முன்னிட்டு கோர்ட்டை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.

எனினும், ஆம் ஆத்மி கட்சியினர், சிசோடியாக கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன்பின்பு பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டில் சிசோடியா ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது அவர் கோர்ட்டில் கூறும்போது, என்னை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை என்ற பெயரில் 9 முதல் 10 மணிநேரம் வரை அமர வைத்து, ஒரே கேள்விகளை திரும்ப, திரும்ப கேட்டனர்.

அது மனஉளைச்சல் ஏற்படுத்தும் வகையில், அதற்கு ஈடான துன்புறுத்தலுக்கு குறையாமல் இருந்தது என சிசோடியா கோர்ட்டில் குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

சிசோடியா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கிருஷ்ணன், கோர்ட்டில் கூறும்போது, சிசோடியாவின் சி.பி.ஐ. காவலை நீட்டிக்க கோருவதற்கான விசயங்களை அவர்கள் நியாயப்படுத்தவில்லை என கூறினார்.

இந்த வழக்கில் அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று, சிசோடியாவின் சி.பி.ஐ. காவல் 6-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.


Next Story